இது உங்கள் இடம் : நாடு எப்படி உருப்படும்?

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : நாடு எப்படி உருப்படும்?

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: கொடிய கொரோனாவின் இரண்டாவது அலையிலும், மக்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று, 72 சதவீத ஓட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தை காத்த அவர்கள், பாராட்டுக்கு உரியோர்.'இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியாது' என, அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும், மே, 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தலையை பிய்த்துக் கொள்வர். அதே நேரத்தில் மக்களுக்கும், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.


ஏனெனில், இரு திராவிடக் கட்சிகளும் அள்ளி வீசிய வாக்குறுதிகள் அப்படி. இல்லத்தரசிகளுக்கு, 1,000 ரூபாயா அல்லது 1,500 ரூபாயா எது கிடைக்கும்? இலவச கேபிள் இணைப்பு, ஆறு சிலிண்டர், அனைத்து வங்கி கடன்களும் ரத்து, இலவச வீடு போன்றவற்றில், எவை எல்லாம் கிடைக்கும் என்ற கனவில் மிதக்கின்றனர்.ஆனால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில், சில மட்டுமே நிறைவேற்றப்படும்; பெரும்பாலானவை, கானல் நீராகி விடும்.இது ஒவ்வொரு ஆட்சியிலும் நடந்தாலும், மக்கள் ஏமாறுவதையும், அரசியல்வாதிகள் ஏமாற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வரும் நபர்கள், கொள்ளை அடிப்பதில் மும்முரம் காட்டுவர்; மக்களுக்கு, 'பிஸ்கட்' போல, சில இலவசங்கள் துாக்கி வீசப்படும்.


அட அப்படியே, ஆட்சி அமைக்கும் கட்சி, தான் அறிவித்த எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றினால், மக்கள் வாழ்வதற்கு, அரசு வழங்கும் இலவசங்களே போதுமானது. எதற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும். இப்போதே பலர், உழைக்க மறந்து, 'டாஸ்மாக்' கடையில் மயங்கிக் கிடக்கின்றனர்.இந்நிலையில், மாதந்தோறும் இலவசமாக பணமும் கொடுத்தால் நாடு, 'உருப்படும்!'

மூலக்கதை