புதிய 'யூடியூப் சேனல்' துவக்கியது காங்.,

தினமலர்  தினமலர்
புதிய யூடியூப் சேனல் துவக்கியது காங்.,

புதுடில்லி :காங்கிரஸ் கட்சி, தங்கள் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், 'ஐஎன்சி டிவி' என்ற பெயரில், புதிய 'யூடியூப்' சேனலை நேற்று துவக்கியது.தங்கள் தரப்பு செய்திகளை முழுமையாக வெளியிடாமல், ஊடகங்கள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாளுக்கு நாள், காங்., பலவீனமடைந்து வருவது குறித்து, செய்தியாளர்கள் ராகுலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'ஊடகங்கள் உட்பட நாட்டின் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் காங்.,குக்கு எதிராக செயல்படுகிறது' என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, தங்கள் கட்சிக்கென தனி காட்சி ஊடகத்தை துவங்க காங்., தலைமை முடிவு செய்தது. இந்நிலையில், 'ஐஎன்சி டிவி' என்ற யூடியூப் சேனலை, காங்., நேற்று துவக்கியது.
இதில், காங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துக்கள் ஒளிபரப்பாகும். இதில், தொடர்ந்து 24 மணி நேரமும், நேரலையில் செய்திகள் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.துவக்க நாளான நேற்று, முதல் நிகழ்ச்சியாக, சுதந்திர போராட்டத்தில், பத்திரிகையாளராக மஹாத்மா காந்தி ஆற்றிய பணிகள் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில், பத்திரிகைகளில் காந்தி எழுதிய கட்டுரைகளை தொகுப்புகள் காண்பிக்கப்பட்டன.

மூலக்கதை