கோஹ்லி, வில்லியம்சன் போல… திறமையான வீரர் பன்ட்..! பான்டிங் பாராட்டு

தினகரன்  தினகரன்
கோஹ்லி, வில்லியம்சன் போல… திறமையான வீரர் பன்ட்..! பான்டிங் பாராட்டு

மும்பை: விராத் கோஹ்லி, கேன் வில்லியம்சன் போல மிகத் திறமையான வீரர் ரிஷப் பன்ட் என்று டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன், தொடக்கத்திலேயே அனல் பறக்கும் ஆட்டங்களால் விறுவிறுப்பாகி உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான்  டெல்லி அணிகள் மோதுகின்றன. இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் தலைமையில் களமிறங்கும் டெல்லி அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.சூப்பர் கிங்சுடன் மோதிய முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் பன்ட் குறித்து பயிற்சியாளர் பான்டிங் கூறியதாவது: ரிஷப் பன்டின் விக்கெட் கீப்பிங் திறமை மீது எப்போதும் ஒரு கேள்விக்குறி இருக்கத்தான் செய்கிறது. தனது தவறுகளை சரி செய்துகொள்ள அவர் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். அதே சமயம் பேட்டிங்கில் அவரது திறமை மிக அலாதியானது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பன்ட் கீப்பிங் செய்த விதம் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. எதிர்பார்த்தை விடவும் சிறப்பாக செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். இதே போல கீப்பிங்கை மேம்படுத்திக் கொண்டால், அடுத்த 10-12 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் அவர் தான். இப்படி ஒரு திறமையான வீரரை வைத்திருக்க அனைத்து அணிகளுமே விரும்பும் என்பதில் சந்தேகமில்லை. பேட்டிங் வரிசையில் அவரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் தான் வெற்றியின் ரகசியம் உள்ளது. கோஹ்லி, வில்லியம்சன் போல, பன்ட் கடைசி வரை களத்தில் இருந்தால் நிறைய போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க முடியும். இவ்வாறு பான்டிங் பாராட்டி உள்ளார்.

மூலக்கதை