கணவர் இறந்ததால் அரசு பணிகளை ஏற்றார் ராணி

தினகரன்  தினகரன்
கணவர் இறந்ததால் அரசு பணிகளை ஏற்றார் ராணி

லண்டன்: தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்ததை தொடர்ந்து, இங்கிலாந்து அரச நிர்வாக பொறுப்பை இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் ஏற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை மறுநாள் வின்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதால், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் ராணி, அவரது உறவினர்கள் உள்பட மொத்தம் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இதன் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், ‘இறுதிச் சடங்கில் பங்கேற்க வரும் பேரன்கள் இளவரசர் வில்லியம்ஸ், ஹாரிஸ்சுக்கு முதல் மற்றும் 5ம் நாளில் 2 கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியானால் தான், இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்,’ என்று கூறினார். இங்கிலாந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் அரச குடும்பத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 2,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு. இதற்கு பிலிப் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது அவர் பயன்படுத்திய லார்ட் சேம்பர்லெய்ன் அரசு உடைமைகள், ராயல் விக்டோரியன் செயினுடன் கூடிய சின்னம்,  செங்கோல் ஆகியவை நேற்று முன் தினம் ராணியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்து, 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் அரச நிர்வாக பொறுப்பை ஏற்றார்.

மூலக்கதை