இந்தியா, அமெரிக்கா தடை விதித்த போதிலும் உலக பணக்காரர் ஆனார் டிக்டாக் நிறுவனர் சாங்: சொத்து மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடி

தினகரன்  தினகரன்
இந்தியா, அமெரிக்கா தடை விதித்த போதிலும் உலக பணக்காரர் ஆனார் டிக்டாக் நிறுவனர் சாங்: சொத்து மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடி

பீஜிங்: கடந்தாண்டு இந்தியா, அமெரிக்க அரசால் தடை விதிக்கப்பட்ட போதிலும்,  டிக்டாக் நிறுவனர் சாங் யிமிங் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு லடாக்கில் இந்தியா - சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, இந்தியா-சீன இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீன பொருட்களுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் டிக்டாக் உட்பட சீனாவின் 59 செயலிகளின் பதிவிறக்கம், பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. குறிப்பாக, டிக்டாக் செயலி இந்தியாவின் பொழுதுபோக்கு செயலிகளின் மிக முக்கிய இடத்தை பிடித்து இருந்தது. இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு இந்தியா, அமெரிக்கா என மிகப்பெரும் நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட டிக்டாக் செயலியின் தாய் நிறுவனம் பைடான்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சாங் யிமிங் (38). தற்போது,  பைடான்ஸ் நிறுவன பங்குகள் உயர்ந்ததை அடுத்து உலகின் பணக்காரர்கள் பட்டியலில் சாங் யிமிங் இடம் பிடித்துள்ளார். ப்ளுமூபெர்க் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் சாங் யிமிங் பெயர் இடம்பெற்றுள்ளது. பைடான்ஸ் நிறுவனத்தின் பங்கானது சந்தையில் ரூ.18 லட்சத்து 78 ஆயிரம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நிறுவனத்தின் பங்கில் 25 சதவீதம் வைத்திருக்கும் சாங் யிமிங்கின் சொத்து மதிப்பானது ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. பைடான்ஸ் நிறுவனம், டவுடியாவ் சிறு வீடியோ மற்றும் செய்தி நிறுவனத்தையும் நடத்தி வருகின்றது. இகமார்ஸ், ஆன்லைன் கேமிங் என தனது நிறுவனத்தின் தளங்களை விரிவுபடுத்திய பைடான்ஸ் கடந்த ஆண்டை காட்டிலும் தனது நிறுவனத்தின் வருமானத்தை இரட்டிப்பாக்கி உள்ளது.

மூலக்கதை