டில்லியின் வெற்றி தொடருமா: இன்று ராஜஸ்தானுடன் மோதல் | ஏப்ரல் 14, 2021

தினமலர்  தினமலர்
டில்லியின் வெற்றி தொடருமா: இன்று ராஜஸ்தானுடன் மோதல் | ஏப்ரல் 14, 2021

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டில்லி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ரிஷாப் பன்ட் தலைமையிலான டில்லி அணி, சஞ்சு சாம்சன் வழிநடத்தும் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது.

டில்லி அணி, தனது முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்த பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி மீண்டும் நல்ல துவக்கம் தரலாம். கேப்டன் ரிஷாப் பன்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அஜின்கியா ரகானே கைொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுக்கு டாம் கர்ரான், ஸ்டாய்னிஸ் ஒத்துழைப்பு தந்தால் நல்லது.  ‘சுழலில்’ அஷ்வின், அமித் மிஸ்ரா கூட்டணி எழுச்சி பெற வேண்டும்.

ராஜஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்த சோகத்தில் உள்ளது. இப்போட்டியில் சதம் கடந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மீண்டும் கைகொடுக்கலாம். ஏற்கனவே ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் தற்போது காயத்தால் ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் விலகி இருப்பது பின்னடைவு. துவக்க வீரராக மனன் வோரா எழுச்சி பெற வேண்டும். ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினால் நல்லது. ஷிவம் துபே, ரியான் பராக் ஒத்துழைப்பு தந்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு கவலை அளிக்கிறது. வேகத்தில் சேட்டன் சக்காரியா, ‘ஆல்–ரவுண்டர்’ கிறிஸ் மோரிஸ் ஓரளவு கைகொடுக்கின்றனர். முஸ்தபிஜுர் ரஹ்மான் ரன் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். ‘சுழலில்’ ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் டிவாட்டியா, ரியான் பராக் விக்கெட் வேட்டை நடத்தினால் முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.

மூலக்கதை