ஓடிடி தளம் துவங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்

தினமலர்  தினமலர்
ஓடிடி தளம் துவங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்

தமிழ் சினிமாவின் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் முக்தா பிலிம்ஸ். கமல்ஹாசன் நடித்த நாயகன், ரஜினிகாந்தின் பொல்லாதவன் ஆகிய படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது, வேதாந்த தேசிகர் என்ற வராலாற்று பின்புலம் கொண்ட படத்தைத் தயாரித்துள்ளது.

ஆன்மிக மகான்களில் தனித்துவமானவர் வேதாந்த தேசிகர். அவரது அறம் சார்ந்த ஆன்மிக சேவையை, வாழ்வை யாருமே இதுவரை திரைப்படத்தில் பதிவு செய்யவில்லை. அதை முதல்முறையாக முக்தா பிலிம்ஸ் செய்துள்ளது. இப்படத்தை முக்தா சீனிவாசனின் மகன் முக்தா சுந்தர் இயக்கி இருப்பதோடு படத்தில் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

இப்படத்தில் வேதாந்த தேசிகராக ஆராய்ச்சியாளரும், உபன் யாசரும் ஆன துஷ்யந்த் ஸ்ரீதர் திரைக்கதை எழுதி நடித்துள்ளார். இவர் வேதாந்த தேசிகரின் வாழ்க்கைக் குறிப்புகளை திறம்பட ஆய்ந்தவர். மேலும் இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியான பிராக்ருத மொழியை இப்படத்தில் பயன்படுத்தவும் செய்திருக்கிறார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஏன் என்றால் வேதாந்த தேசிகர் ப்ராக்ருத மொழியில் பாடல் எழுதும் அளவிற்கு பரிச்சயம் உடையவராம்.

துருக்கியர்களின் படையெடுப்பில் இருந்த ஸ்ரீரங்கம் கோவிலை எப்படி வேதாந்த தேசிகர் காத்து நின்றார் என்பதே இப்படத்தின் திரைக்கதை கதை. அதை மிக அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் முக்தா சுந்தர். படத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் உடன் ஸ்ருதி பிரியா, ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய அம்சமாக மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைத்துள்ளார்

இன்று ஆன்மிகம் விரும்பும் பெரியவர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக சிறு சிக்கல் இருப்பதால் இப்படம் நேரடியாக முக்தா பிலிம்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தைப் பார்க்க முக்தா பிலிம்ஸ் வெப்சைட்டில் டிக்கெட் புக் செய்யலாம். மேலும் வெளிநாட்டில் இருப்பவர்கள் லாக்இன் செய்து பார்க்கும் வசதியும் இருக்கிறது. புதிதாக முக்தா பிலிம்ஸ் பெயரில் ஓடிடி தளம் துவங்கி அதில் முதலாவதாக வேதாந்த தேசிகர் படத்தை வெளியிடுகிறார்கள். இனி தொடர்ந்து முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களையும் இந்த ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளோம். அதோடு ரிலீசுக்கு தயாராகி வெளியிட முடியாமல் உள்ள சிறு முதலீட்டு படங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம். வருகிற 18-ஆம் தேதி லைவிற்கு வரும் இப்படத்தை 25-ஆம் தேதி முதல் அனைவரும் கண்டு மகிழலாம். ஒரு ஆன்மிக அனுபவத்திற்கு தயாராக இருங்கள் என்கிறார் தயாரிப்பாளர் முக்தா ரவி.

மூலக்கதை