அதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 18 விமானம் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 18 விமானம் ரத்து

மீனம்பாக்கம்: கொரோனா வைரஸ் 2வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் விமான நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக சென்னை மாநகர் அதை சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக அதிகளவில் பரவுகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதே போன்று வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் பொதுமக்கள் பெருமளவு குறைத்து விட்டனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானங்களில் நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் பேர் வந்தனர்.

தற்போது அதுபடிப்படியாக குறைந்து நேற்று 5,500 பேர் மட்டுமே வந்தனர். அதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாளொன்றுக்கு 13 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர்.

அதுவும் தற்போது குறைந்து நேற்று 6,500 பேர் மட்டுமே பயணித்தனர்.

கடந்தாண்டு செப்டம்பரில் இருந்த பயணிகள் எண்ணிக்கைபோல் தற்போது குறைவாகவே இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் சென்னையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் காலியவே இயக்கப்பட்டன.

பெங்களூரில் இருந்து வந்த 2 விமானங்களில் 18 பயணிகளும், ராய்ப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூர் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டில் இருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

அதைப்போல் நேற்று போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூர் 1, மதுரை 1, பாட்னா 1 என 9 விமானங்களும், சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்களும் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து விமான நிலையம் களைகட்ட தொடங்கியிருந்தது.

அது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதே நிலைநீடித்தால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் மேலும் பல விமானங்கள் ரத்தாகும் நிலை உள்ளது.

.

மூலக்கதை