ஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
ஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு

ஹரித்வார்: ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்ட 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் போலீசார் திணறிவருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1ம் தேதி முதல் கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி வரை கும்ப மேளா நடைபெற உள்ள நிலையில், கடந்த 12, 14 (இன்று) மற்றும் 27ம் ஆகிய தேதிகளில் புனித நீராடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், ஏராளமான பொதுமக்கள், துறவிகள் மற்றும் அகோரிகள் ஹரித்வாரில் புனித நீராட குவிந்துள்ளனர். இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கும்ப மேளாவில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கும்ப மேளாவிற்கு வரும் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொடர்ந்து அலட்சியாக ஹரித்வாரில் குவிகின்றனர். குறிப்பாக புனித நீராடலின் போது ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கங்கை நதிக்கரையில் திரண்டதால் கொரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளது. இன்றும் புனித நீராடலின்போது 31 லட்சம் பேர் நதியில் நீராடியதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். மேலும், கும்பமேளாவிற்கு வரும் மதத் தலைவர்கள், பக்தர்கள் ேபான்றோர் கொரோனா பரிசோதனை செய்யவும், முகக் கவசங்கள் அணியவும், சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றவும் மறுத்ததால், ஆயிரக்கணக்கானோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 102 பக்தர்களுக்கும், 20 மடாதிபதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஜுனா அகதாஸில் ஐந்து மடாதிபதிகளும், நிரஞ்சனி அகதாஸில் இரண்டு மடாதிபதிகளும், நாத் மற்றும் அக்னி அகதாஸில் இருந்து தலா ஒரு மடாதிபதியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை