மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்: திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்: திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை

மதுரை: மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

இணையதளத்தில் மட்டுமே பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா உலக புகழ் பெற்றது.

இந்த விழா நாளை (ஏப். 15) கொடியேற்றத்துடன் துவங்கி ஏப். 26ல் நிறைவடைகிறது. தற்போது பரவும் கொரோனா 2வது அலை தொற்று எதிரொலியாக இத்திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

எனினும் சுவாமி, அம்மன் தரிசனத்திற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாளை காலை 9. 30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. அன்று காலை 6 மணி முதல் 9மணி வரையிலும், பகல் 11. 30மணி முதல் 12 மணி வரை, மாலையில் 4 மணி முதல் 5. 30 மணி வரை, இரவு 7. 30மணி முதல் இரவு 9மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

ஏப். 16ம் தேதி துவங்கி ஏப். 21ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், காலை 9 மணி துவங்கி பகல் 12. 30 மணி வரையிலும், மாலை 4 மணி துவங்கி 5. 30 மணி வரையிலும், இரவு 7 மணி துவங்கி 9 மணி வரையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஏப். 22ல் பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஏப். 23ம் தேதியன்று ‘திக்கு விஜயம்’ நாளிலும் இதே நேரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி 24ம் தேதி காலை 8. 45 மணி முதல் 8. 50 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே அரசு நெறிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி திருக்கோவில், இந்து சமயஅறநிலையத்துறை வெப்சைட்டிலும், யூ-டியூப், உள்ளூர் தொலைக்காட்சியிலும் கண்டு ரசிக்கலாம்.   திருமண கோலத்தில் உள்ள அம்மன், சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9. 30 மணி முதல் 2. 30 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை.

ஏப். 25ல் 11ம் நாள் திருநாளன்று சட்டத்தேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது என கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை