மும்பைக்கு முதல் வெற்றி * கடைசியில் கோல்கட்டா சொதப்பல் | ஏப்ரல் 13, 2021

தினமலர்  தினமலர்
மும்பைக்கு முதல் வெற்றி * கடைசியில் கோல்கட்டா சொதப்பல் | ஏப்ரல் 13, 2021

சென்னை: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் கடைசி நேரத்தில் சொதப்பிய கோல்கட்டா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் பீல்டிங் தேர்வு செய்தார். 

சூர்யகுமார் விளாசல்

மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் மோசமான கொடுத்தது. 6 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்த குயின்டன் டி காக், வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கினார். ரோகித்துடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ். பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என அடுத்தடுத்து விளாசிய சூர்யகுமார், அரைசதம் கடந்தார். 

இவர், 56 ரன்னில் சுப்மன் கில்லிடம் ‘பிடி’ கொடுத்தார். இஷான் கிஷான் (1), கம்மின்ஸ் ‘வேகத்தில்’ வெளியேறினார். பின் ரோகித்துடன் சேர்ந்தார் ஹர்திக் பாண்ட்யா. பிரசித் பந்தில் சிக்சர், வருண் பந்தில் பவுண்டரி விளாசிய ரோகித், 43 ரன் எடுத்த போது, கம்மின்ஸ் வேகத்தில் போல்டானார்.

ரசல் ‘ஐந்து’

அடுத்த சில நிமிடத்தில் ஹர்திக் பாண்ட்யா (15) அவுட்டானார். 18வது ஓவரில் பந்து வீச வந்த ஆன்ட்ரி ரசல், மும்பை அணிக்கு வில்லனாக அமைந்தார். முதலில் அபாயகரமான போலார்டை 5 ரன்னுக்கு அவுட்டாக்கிய இவர், ஜான்செனை ‘டக்’ அவுட்டாக்கினார்.

ரசல் வீசிய கடைசி ஓவரில் குர்னால் பாண்ட்யா (15), பும்ரா (0), ராகுல் சகார் (8) என மூவரும் அவுட்டாகினர். மும்பை அணி 20 ஓவரில் 152 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கோல்கட்டாவின் ரசல் 5 விக்கெட் சாய்த்தார்.

ராணா அபாரம்

கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், நிதிஷ் ராணா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சுப்மன் 33 ரன் எடுத்தார். ராகுல் சுழலில் திரிபாதி (5) அவுட்டானார். ராணா, இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரைசதம் அடித்தார். இயான் மார்கன் (7) விரைவில் திரும்ப, ராணாவும் 57 ரன்னில் கிளம்பினார். 

கடைசி 30 பந்தில் 31 ரன் தேவைப்பட்டன. சாகிப் அல் ஹசன் ‘டக்’ அவுட்டாக, தினேஷ் கார்த்திக், ரசல் இணைந்து பந்துகளை வீணடித்தனர். கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன. பவுல்ட் வீசிய இந்த ஓவரில் ரசல் (9), கம்மின்ஸ் (0) அவுட்டாகினர். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (8), ஹர்பஜன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 10 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி முதல் வெற்றி பெற்றது. 

 

ரோகித் காயமா

ஐ.பி.எல்., தொடரில் 2014க்குப் பின் மீண்டும் பந்து வீசினார் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா. நேற்று போட்டியின் 14வது ஓவரை வீசினார். முதல் பந்தை வீசும் முன் இடது கணுக்கால் திருகியது. வலியால் அவதிப்பட்ட இவர், உடனடியாக இதில் இருந்து மீண்டு, பந்துவீச்சை தொடர்ந்தார். 

 

இது ‘பெஸ்ட்’

மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 15 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார் கோல்கட்டா அணியின் ஆன்ட்ரி ரசல். இது, ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் ரசலின் சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. இதற்கு முன் 11 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

மூலக்கதை