1.67 கோடி டோஸ் கைவசம் இருக்கும் தடுப்பூசி தட்டுப்பாடில்லை திட்டமிடுவதில் குளறுபடி: மாநிலங்கள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
1.67 கோடி டோஸ் கைவசம் இருக்கும் தடுப்பூசி தட்டுப்பாடில்லை திட்டமிடுவதில் குளறுபடி: மாநிலங்கள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘தடுப்பூசியில் தட்டுப்பாடில்லை, போதுமான திட்டமிடல்  இல்லாததுதான் குழப்பத்திற்கு காரணம்’ என மத்திய அரசு கூறி உள்ளது. கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி இல்லாததால் பல மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:இதுவரை மாநில அரசுகள் 13 கோடியே 10 லட்சத்து 90,370 டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளன. அதில், வீணாக்கியது உட்பட 11 கோடியே 43 லட்சத்து 69,677 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1 கோடியே 67 லட்சத்து 20,693 டோஸ்கள் அவர்கள் கைவசம் இருக்கும். இம்மாத இறுதிக்குள் 2 கோடியே 1 லட்சத்து 22,960 டோஸ் மருந்துகள் சப்ளை செய்யப்பட்டு விடும். இந்த கணக்குபடி பார்த்தால் தடுப்பூசியில் தட்டுப்பாடு இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அதே சமயம், தடுப்பூசி போடுவதில் போதுமான திட்டமிடல் இல்லாததுதான் குழப்பத்திற்கு காரணமே. பெரிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் 4 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி வழங்கப்படுகிறது. 4 அல்லது 5வது நாளில் மீண்டும் தேவையான அளவு சப்ளை செய்யப்படுகிறது. சிறிய மாநிலங்களுக்கு 7 நாளுக்கு தேவையான மருந்து தரப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் அதிகளவிலும், இன்னொரு மாவட்டத்தில் குறைவான அளவிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இருப்பு உள்ள இடத்திலிருந்து தேவையான இடங்களுக்கு தடுப்பூசியை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதே மாநில அரசுகளுக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கை. இவ்வாறு கூறினார். நேற்று வரை நாடு முழுவதும் 10 கோடியே 85 லட்சத்து 33,085 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மூலக்கதை