சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: மே. வங்க பாஜ தலைவர், சுவேந்து மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அதிரடி

தினகரன்  தினகரன்
சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: மே. வங்க பாஜ தலைவர், சுவேந்து மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தடை விதித்த நிலையில், இம்மாநில பாஜ தலைவர்கள் மீதும் தேர்தல் ஆணையம்  அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.  மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் திரிணாமுல், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் 4ம் கட்ட தேர்தல் நடந்த போது, சிதல்குச்சியில் வாக்குப்பதிவு மையத்தில் மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, பாதுகாப்பு படைக்கு எதிராக முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார்.  இந்நிலையில், பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக  மக்களை போராடுவதற்கு தூண்டியதாகவும், இஸ்லாமிய வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் மம்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு மம்தாவும் விளக்கம் அளித்தார். ஆனால், அவரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என அறிவித்த தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரை தேர்தல் அவர் பிரசாரத்தில் ஈடுபடவும் தடை விதித்தது. இதற்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், மேற்கு வங்க பாஜ மூ்த்த தலைவர்களில் ஒருவரான ராகுல் சின்கா, ‘கூச் பெகார் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் 4 பேரை சுட்டுக் கொன்றதற்கு பதிலாக 8 பேரை சுட்டுக் கொன்று இருக்க வேண்டும்.’ என கூறியிருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையம், நேற்று பகல் 12 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை 48 மணி நேரம் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என தடை விதித்தது. இதேபோல், மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ், ‘யாராவது எல்லை மீறி செயல்பட்டால், சிதல்குச்சியில் நடந்ததுதான் நடக்கும். பல இடங்களில் சிதல்குச்சி இருக்கிறது,’ என கூறியிருந்தார். சர்ச்சைக்குரிய இந்த பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜ சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டுள்ள சுவேந்து அதிகாரிக்கும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரசாரம் ஒன்றில் பேசிய சுவேந்து, ‘மம்தாவுக்கு வாக்களித்தால் மினி பாகிஸ்தான் உருவாகிவிடும்,’ என்றார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  தனியாளாக அமர்ந்து மம்தா போராட்டம்தேர்தல் ஆணையம் தனக்கு 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து, தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக மம்தா அறிவித்து இருந்தார். அதன்படி, கொல்கத்தாவில் மயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே நேற்று காலை 11.40 மணி முதல் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். அங்கு திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மம்தா மட்டும் தனியாளாக அமர்ந்து இந்த போராட்டத்தை நடத்தினார்.

மூலக்கதை