அணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
அணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு

டோக்கியோ: 10 ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணு உலையின் கதிரியக்க நீரை கடலில் விடுவிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


2011-ம் ஆண்டு ஜப்பானை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அந்த பேரிடரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இப்பேரிடரில் புகுஷிமா அணு உலையும் பாதிப்புக்குள்ளானது. அணு உலைகள் சேதமடைந்து நீரில் கதிரியக்கம் கலந்தது. அதை சுத்தம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். கதிரியக்க நீர் அதற்கு தடையாக உள்ளது. அதனை வெளியேற்றினால் தான் அணு உலைகளை அப்புறப்படுத்த முடியும்.

கதிரியக்க நீரை வெளியேற்றும் பணியில் உள்ள டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (டெப்கோ), ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்குகளில் அவற்றை சேமிக்கிறது. ஆனால் அவை 2022-ல் நிரம்பிவிடும். எனவே கதிரியக்க நீரை கடலில் விடுவிப்பது என பிரதமர் யோஷிஹிடே சுகா தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அணு உலையை நீக்க தண்ணீரை வெளியேற்றுவது தவிர்க்க முடியாத பணி என்று கூட்டத்தில் சுகா கூறினார். கதிரியக்க நீரின் பாதுகாப்பு நிலைகளை உறுதி செய்த பிறகே வெளியேற்றப்படும் என்றார்.

வெளியேற்றாமல் சேமிக்கலாம்!சுற்றுச்சூழல் என்.ஜி.ஓ.,வான க்ரீன் பீஸின் அணுசக்தி நிபுணர் ஷான் பர்னி, புகுஷிமா வெளியேற்றங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றார். 'ஸ்டார்ன்டியம் 90' போன்ற கதிரியக்க ஐசோடோப்புகள் மீன்கள் மற்றும் மனிதர்களின் எலும்புகளில் சேர்ந்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கிறார். இம்முடிவுக்கு மாற்றாக கழிவுகளை நீண்ட காலம் சேமிக்கலாம், ஜப்பானும் அணுமின் நிலையத்திற்கு வெளியே கழிவுகளை சேமிக்க முடியும் என முன்னர் கூறியதாக குறிப்பிட்டார்.


ஜப்பான் தூதருக்கு சம்மன்அதிகம் தீங்கு விளைவிக்காத ட்ரீடியத்தை தண்ணீரிலிருந்து அகற்ற முடியாது என டெப்கோ அதிகாரிகள் கூறினர். அதே சமயம், சில கதிரியக்க அணுக்களை வெளியேற்றுவதற்கு ஏற்ற நிலைக்கு கொண்டு வர முடியும் என்கின்றனர். இருப்பினும் ஜப்பானின் இம்முடிவுக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் சீனாவும் இது தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கழிவுநீரை வெளியேற்றும் பிரச்சினையை பொறுப்பான முறையில் கையாளுமாறு சீனா கூறியது. ஜப்பான் தூதருக்கு தென் கொரியா சம்மன் அனுப்பியுள்ளது.

மூலக்கதை