தேர்தல் ஆணையத்தின் பிரசார தடை உத்தரவை கண்டித்து மேற்குவங்க முதல்வர் தனியாளாக தர்ணா: பாஜக நிர்வாகி பிரசாரத்துக்கு 48 மணி நேரம் தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் ஆணையத்தின் பிரசார தடை உத்தரவை கண்டித்து மேற்குவங்க முதல்வர் தனியாளாக தர்ணா: பாஜக நிர்வாகி பிரசாரத்துக்கு 48 மணி நேரம் தடை

கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் பிரசார தடை உத்தரவை கண்டித்து, மேற்குவங்க முதல்வர் மம்தா தனியாளாக தர்ணா போராட்டம் நடத்தினார். இதற்கிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக நிர்வாகியின் பிரசாரத்துக்கு 48 மணி நேரம் தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   மேற்குவங்கத்தில் நடந்த நான்காம் கட்ட வாக்குப் பதிவின்போது பெஹார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக மற்றும் மத்திய படைகளுக்கு  எதிராக ேபசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு விளக்கம் கேட்டு இரண்டு நோட்டீசை  தேர்தல் ஆணையம் அவருக்கு அனுப்பியது.



அதற்கு பதிலளித்த மம்தா, தான் தவறாக  ஏதும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். இருந்தும் தேர்தல் ஆணையம்  நேற்று மாைல வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மம்தா  பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க கூடாது என  உத்தரவிட்டது.

இருந்தும்  இன்று நண்பகல் 11. 40 மணியளவில் மம்தா பானர்ஜி, கொல்கத்தா காந்தி சிலை  அருகே, தேர்தல் ஆணையத்தின் முடிவை கண்டித்து அடையாள தர்ணா போராட்டத்தில்  பங்கேற்றார். அப்போது, அவரது அருகில் தொண்டர்களோ மற்ற நிர்வாகிகளோ அனுமதிக்கப்படவில்லை.

தனியாளாக அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன், பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா தேர்தல் பிரசாரத்தின் போது பேசுகையில், ‘சிஐஎஸ்எப் வீரர்கள் நான்கு பேரை அல்ல; எட்டு பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய பாதுகாப்புப் படைகளிடம் எதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் எட்டு பேரைக் கொன்றிருக்க வேண்டும்.

இங்குள்ள குண்டர்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க விரும்புகிறார்கள். மத்திய படைகள் சரியாக பதிலளித்தன.

அதேபோல் அந்த கும்பல் மீண்டும் நடந்து கொண்டால், பாதுகாப்புப் படைகள் சரியான பதிலளிக்கும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இவரது பேச்சு, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும், சட்டஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

அதையடுத்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘புகாருக்கு ஆளான ராகுல்சின்ஹா அடுத்த 48 மணி நேரத்திற்கு (ஏப். 15 மணி 12 வரை) எவ்வித தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்க கூடாது.

ஊடக சந்திப்பு, பேரணி போன்றவற்றிலும் கலந்து கொண்டு பேசக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.


.

மூலக்கதை