இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்: ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.750...91.6% பயனுள்ளதாக இருக்கும் என தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்: ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.750...91.6% பயனுள்ளதாக இருக்கும் என தகவல்

புதுடெல்லி: ரஷ் யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.   இந்த தடுப்பூசி 91. 6 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி இருக்கும்.

ஏற்கெனவே பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவும் ரஷ்யாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே இந்த தடுப்பூசிகளை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இறக்குமதி செய்து சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்றும், பின்விளைவுகள் எதுவும் இருக்காது என்றும், அதேசமயத்தில் கொரோனா வைரஸிடமிருந்து தக்க பாதுகாப்பு அளிக்கும் என்றும் சோதனையில் கண்டறியப்பட்டது.

சோதனையில் கிடைத்த புள்ளிவிவரங்களை வைத்து அவசரகால தேவைக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்ததன்பேரில், தற்போது இம்மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு என புகார் எழுந்த நிலையில் மத்திய அரசு 3வது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


முன்னதாக ரஷ்யாவின் கமலயா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91. 6 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதன் ஒரு டோஸின் விலை அதிகபட்சம் ரூ. 750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா ஒப்புதல் அளித்தது. செர்பியா, அர்ஜென்டினா, வொலிவியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசெவ் கூறுகையில், ‘ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான பரிந்துரையை வரவேற்கிறேன்.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதற்கான இந்திய அரசின் முயற்சிகளுக்கு இந்த தடுப்பூசி உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.


.

மூலக்கதை