நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பன்வாரிலால் புரோகித் (கவர்னர்): அமைதி, செழிப்பு, கொண்டாட்டங்களை குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நம்முடைய மரபு, கலாசாரத்தின் வெளிப்பாடாக சித்திரை திருநாள் கொண்டாட்டம் அமைகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ இந்த நன்நாளில் வாழ்த்துகிறேன்.



எடப்பாடி  பழனிசாமி (முதல்வர்):தொன்மையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியை பேசும் உலகின் மூத்தகுடியான தமிழ்ப் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி  வருகிறார்கள். மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்.
தமிழிசை சவுந்தரராஜன் (ஆளுநர், தெலங்கானா மற்றும் புதுச்சேரி): உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை வென்றிட இப்புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):இப்புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் துயரம் நீங்கிடவும், வாழ்வில் வளமும், நலமும் பெருகிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ராமதாஸ் (நிறுவனர், பாமக):கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக 2வது ஆண்டாக  சித்திரை திருநாளை பொதுமக்கள் ஒன்று கூடி உற்சாகத்துடன் கொண்டாட முடியாத  சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும்  நலமும், வளமும்  கிடைக்க வேண்டும்.

கே. எஸ். அழகிரி (தமிழக காங்.

தலைவர்): தமிழர்கள் இழந்த உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்வை சூழ்ந்திருந்த இருள் அகன்று ஒளி பிறக்க, தமிழ்ப் புத்தாண்டை சிரம் தாழ்த்தி வரவேற்போம்.


ஜி. கே. வாசன் (தமாகா):தமிழர்களின் வாழ்க்கை இயற்கையோடும், கலை, கலாசாரத்தோடும், விஞ்ஞானத்தோடும், இறை நம்பிக்கையோடும் பின்னி பிணைந்தது. இந்நன்னாளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.



சரத்குமார் (சமக):உலகின் மூத்த மொழியான தமிழ் பேசும் தமிழினம், தேசத்தை வல்லரசாக்கும் முதல் இனம் என்ற பெருமை கிடைக்கச்செய்யும் அளவிற்கு உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் பணிகள் செய்வோம்.

டி. டி. வி. தினகரன் (அமமுக):பண்பாடு, கலாச்சாரம், உணவு என எல்லாவற்றிலும் இயற்கையோடு இணைந்த நம்முடைய பழந்தமிழர் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்கு சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது. இந்த புத்தாண்டில் அதற்கான உறுதியினை ஏற்றிடுவோம்.

என். ஆர். தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி):பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் அறுவடை முடிந்து நெற்களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் மக்கள் ஊரெங்கும் திருவிழாக்கள் நடத்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இது ஆண்டு முழுவதும் தொடர்ந்திடவும், புலம் பெயர்ந்து உலமெங்கும் வாழும் தமிழ் மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறவும், ஒற்றுமையுடனும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு தழைத்தோங்கிடவும் வேண்டும்.

வி. ஜி. சந்தோசம்
(விஜிபி குழுமம்): ஒவ்வொரு மொழிக்கும் அதன் திருநாள் வருகிறது. தமிழர்களாகிய நமக்கு சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக நம்மை மகிழ்விக்கும் நாளாகத் திகழ்கிறது.
சேம. நாராயணன் (மக்கள் தேசிய கட்சி): சூரியன் ஒளி உடலில் பட்டால் கிருமிகள் அழிக்கப்படும் என்பது அறிவியல் தத்துவம்.

அந்த சூரியனே தமிழகத்தை ஆள போகிறது. இத்திருநாளில் நாம் நினைப்பது வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஏ. சி. சண்முகம் (புதிய நீதிக்கட்சி):விவசாயிகளின் இன்னல்கள் மறையட்டும், வணிகர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், நித்திரையில் இருந்து விலகி சித்திரையில் மக்கள் ஆனந்தமாய் வாழ வாழ்த்துகள்.



எர்ணாவூர் நாராய ணன் (சமத்துவ மக்கள் கழகம்): கொரோனா பரவலில் சிக்கித் தவிக்கின்ற நிலை மாறி அமைதியும், நிம்மதியும் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம். நாட்டு மக்கள் நலம் பெற உலக மக்களை காப்பாற்ற நம்பிக்கையுடன் எதையும் எதிர்கொண்டு வாழும் தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

“இயேசு அழைக்கிறார்’’ பால் தினகரன்: மக்கள் யாவரும் சுபிட்சமாக வாழ வேண்டும்.

நல்லாட்சி மலரும் புதிய ஆண்டாக இப்புத்தாண்டு திகழவும் வாழ்த்துக்கள். மேலும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம். வி. சேகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


.

மூலக்கதை