உச்சத்தை தொடும் கொரோனா தொற்று 150 மருத்துவர்கள் உடனே சென்னை வர உத்தரவு: தமிழக அரசு அவசர நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உச்சத்தை தொடும் கொரோனா தொற்று 150 மருத்துவர்கள் உடனே சென்னை வர உத்தரவு: தமிழக அரசு அவசர நடவடிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் உச்சம் அடைந்து வருவதால் 150 கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனடியாக சென்னைக்கு வரும்படி தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் வெறும் ஆயிரக் கணக்கில் மட்டுமே பரவல் எண்ணிக்கைக் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிப்படையத் தொடங்கியுள்ளனர்.



 அதேசமயம், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ெகாரோனா வைரஸ் தனது தீவிர தன்மையைக் காட்டி வருவதால் இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 4 ஆயிரம் என்ற வகையில் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது.

ஆனால் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு கணக்கு 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பரவும் வேகம் ஒவ்வொரு நாளும் இருமடங்காகி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.



 இதை சமாளிக்க சென்னை மாநகராட்சி மீண்டும் பள்ளி, கல்லூரிகளை கொரோனா முகாம்களாக மாற்றி வருகிறது. கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போன்று வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தையும் மீண்டும் தொடங்கியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்து வருகிறது. ஆனாலும் அரசு பொதுமருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டுகள் எல்லாம் நிரம்பி வருகிறது.

இதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொரோனா முகாம்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் ஒரு நாள் பாதிப்பு என்பது மிக மோசமாக உள்ளது.

இதனால் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையிலும் மருத்துவ குழுக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. முதல் அலையின் போதும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மருத்துவ பணியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

 அதைப் போன்று இப்போதும் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் காய்ச்சல் முகாம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் முகாம்களுக்கு அவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இப்போதும் வெளி மாவட்டங்களிலும் இருந்து 150 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை வரவழைக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தப் படுகின்றனர்.



 இந்த தற்காலிக பணிகளுக்காக இந்திய மருத்துவ கழகத்திடம் தமிழக சுகாதாரத்துறை பட்டியல் கேட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு நாட்களில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் உடனடியாக சென்னை வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனரகம் 3,500 செவிலியர்களை கொரோனா பணிக்காக கூடுதலாக பணியமர்த்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 11மருத்துவ கல்லூரிக்கு அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2,500 செவிலியர்கள் 11 மருத்துவ கல்லூரிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்லூரி திறக்கப்படும் வரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல கொரோனா தொற்று கூடுதலாக உள்ள மாவட்டங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்களை அதிகப்படுத்த உள்ளனர்.   கூடுதலாக பணியமர்த்தப்பட உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா முகாம்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் தற்காலிகமாக ஈடுபடுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த பாதிப்பின் காரணமாக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் அதிகளவில் இந்த மாவட்டங்களுக்கு தேவைப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவ குழுவினர் இங்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

அதற்கான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள் அழைக்கப்பட்டு ஓரிரு நாளில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றனர்.

.

மூலக்கதை