பிரிட்டன் அரசின் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு கை மேல் பலன் : கொரோனா தொற்றும் உயிரிழப்பும் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

தினகரன்  தினகரன்
பிரிட்டன் அரசின் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு கை மேல் பலன் : கொரோனா தொற்றும் உயிரிழப்பும் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

லண்டன் : பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து உணவகங்கள், கடைகள், வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டன. பிரிட்டனில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா கொல்லுயிரி அதி தீவிரமாக பரவியதை அடுத்து, கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கடும் நடவடிக்கைகளுக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் எதிரொலியாக பிரிட்டன் முழுவதுமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், நேற்று முதல் பிரிட்டனில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. வணிக நிறுவனங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர். மதுபான கூடங்கள், உணவகங்களிலும் மக்கள் கூட்டத்தை அதிகளவு காண முடிகிறது. ஒரு மாத ஊரடங்கு காரணமாக பிரிட்டனில் தினசரி வைரஸ் தொற்று 3,500 ஆக குறைந்துவிட்டது. 1000த்திற்கும் மேல் தினசரி மரணங்கள் பதிவாகி வந்த நிலையில், நேற்று 13 உயிரிழப்புகள் மட்டும் பதிவாகி இருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் பொது இடங்களில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று மறைந்த இளவரசர் பிலிப்பிற்கு இறுதி மரியாதை செலுத்த பிரிட்டன் மக்கள் தயாராகி வருகின்றனர். 

மூலக்கதை