கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: வருகிற அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. நாடு முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16ம் ேததி முதல் மக்களுக்கு பல கட்டங்களாக போடப்பட்டு வருகின்றன.

உலகளவில் தினசரி டோஸ்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு  சராசரியாக 38,34,574 டோஸ்களுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது ரஷியன் நேரடி முதலீட்டு நிதி (ஆர்டிஐஎஃப்) அமைப்புடன் சேர்ந்து ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள், ஹெட்டிரோ பயோபார்மா, கிளாண்ட் பார்மா, ஸ்டெலிஸ் பயோபார்மா மற்றும் விச்ரோ பயோடெக் உள்ளிட்ட பல இந்திய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசியை தயாரிக்க உள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது 850 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்திற்குள் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனைத்து பரிசோதனை நடைமுறைகள் மற்றும் அங்கீகாரம் ஆகியன சரியான நேரத்தில் நடைபெறும்பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜான்சன் மற்றும் ஜான்சன் (பயோ இ) தடுப்பூசியும், காடில்லா சைடஸ் தடுப்பூசியும் கிடைக்கும். செப்டம்பர் மாதத்திற்குள் நோவாவெக்ஸ் (சீரம்) மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் நாசி தடுப்பூசி ஆகியவை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அஸ்ட்ராஜெனிகா - ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை பயன்படுத்திய சில ஐரோப்பிய நாடுகளில் மரபணு தொடர்பான மற்றும் ரத்த உறைதல் சிக்கல்கள் வந்துள்ளன. அதையடுத்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தீவிரமான மற்றும் கடுமையான  பாதிப்புகளை எதிர்ெகாள்வது குறித்து புதிய வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை வெளியிடுதல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஒரே நாளில் 29 லட்சம் டோஸ்

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய 5  மாநிலங்களில் மட்டுமே 70 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களிடம் நடத்திய கலந்துரையாடலின் போது வலியுறுத்தி தடுப்பூசி முகாம்களை மூன்று நாட்களுக்கு நடத்தும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு மாநில அரசுகள் கூறும் நிலையில் நேற்றைய முதல் நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட 29 லட்சம் பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை