தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் உச்சம் அடைந்துள்ளதால் முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணைய அனுமதிக்குப் பிறகு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியது.

இதையடுத்து 2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டு, மூன்று மாதங்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் படிப்படியாக கொரோனா குறைய தொடங்கியதால் ஊரடங்கு முடிவடையும் நிலைக்கு வந்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.



இது படிப்படியாக உயர்ந்து இன்று தினசரி பாதிப்பு 6,500ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று ஒரே நாளில் 6,618 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக சென்னையில் 2,124 பேர், செங்கல்பட்டில் 631 பேர், கோவையில் 617 பேர், திருவள்ளூரில் 296 பேர், காஞ்சிபுரத்தில் 206 பேர், தஞ்சாவூரில் 178 பேர், திருப்பூரில் 177 பேர், மதுரையில் 173 பேர், சேலத்தில் 128 பேர், தூத்துக்குடியில் 149 பேர், திருநெல்வேலியில் 144 பேர் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகப்பட்சமாக சென்னையில் 12 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக தலைமை செயலாளர் கடந்த வாரம் புதிய தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி கடந்த 10ம் தேதி முதல், பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது, ஓட்டல், டீக்கடைகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், திருமண விழாக்களில் 100 பேர், இறுதி ஊர்வலத்தில்  50 பேர் என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.



மேலும், விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் 12 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வேகம் எடுத்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கை அறிவிக்கலாமா? என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்துவது, பிசிஆர் பரிசோதனையை இன்னும் அதிகப்படுத்துவது, ஒரே தெருவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பது, தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிப்பதை உறுதி செய்வது குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்காமல் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தேர்வை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. முன்னதாக, இன்று முதல்வர் தலைமையில் நடைபெறும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பிறகு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது காபந்து அரசுதான் உள்ளது. இதனால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது.

ஆனால் தற்போது, அவசர காலம் என்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் ஆலோசனை நடப்பதும், முடிவுகள் எடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை