சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல சுழற்சியால், தென் மாவட்டங்களில் வரும் 15ம் தேதி வரை கோடை மழை பரவலாக பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் சென்னையில் இன்று காலை திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிக  மோசமாகவே இருந்து வருகிறது.

சென்னை, திருச்சி, சேலம் என மாநிலத்தில் பல்வேறு  பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சதமடித்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள்  கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் மக்களை குஷிப்படுத்தும் வகையில் இன்று காலை முதலே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை கோடை வெயில் உச்சத்தை தொட்டு வருகிறது.

வெயிலின் தாக்கம் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. நண்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் தகிப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுவும் நேற்று காலை முதலே சென்னையில் வெயில் கடுமையாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென மேகம் திரண்டு குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

யாரும் எதிர்பாராத வகையில்,  இன்று காலையில் கோயம்பேடு, அண்ணா நகர், வளசரவாக்கம், ராமாபுரம், கே. கே. நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் திடீரென மழை பெய்தது.   மற்ற இடங்களில் லேசான குளிர்ந்த காற்று மட்டும் வீசியது.

இந்த திடீர் மழையால் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதேபோன்று, தமிழகத்தில்  திருச்சி மாநகர் பகுதிகளிலும் காலை முதல் பரவலாக மழை பெய்தது. கன்டோன்மென்ட், பொன்மலைப்பட்டி, எடமலைப்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில்  மழை பெய்தது.   மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம்,  ஆலங்குடி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் அடுத்த  மூன்று மணி நேரத்திற்குள் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர்  ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

குமரி கடல் பகுதியில், 2 கி. மீ. , உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், ஓரிரு இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 14, 15ம் தேதிகளில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வரும் 15ம் தேதி வரை தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளது.

.

மூலக்கதை