24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது

புதுடெல்லி: நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா தொடங்கிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1. 52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம் வகிப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு அதிகமானோர், 45 வயதுக்கு அதிகமானோரில் இணை நோய் பாதிப்புடையோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என்று படிப்படியாக தடுப்பூசி போடும் பணி 3ம் கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ஏப். 11 (இன்று) முதல் 14ம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவாகக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கியது. இதில், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.



இருப்பினும், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள், வரும் நாட்களில் தடுப்பூசி போட தகுதிவாய்ந்த மக்கள், ‘டிகா உத்சவ்’ எனப்படும் தடுப்பூசி திருவிழா முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளன.

தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி கடந்த 85 நாட்களில் 100 மில்லியன் (10 கோடி) டோஸ்களை போட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அதேநேரம் 10 கோடி டோஸ்களை போட அமெரிக்காவுக்கு 89 நாட்களும், சீனாவுக்கு 102 நாட்களும் ஆகின என்று பிரதமர் அலுவலகம் இன்று டுவிட் செய்துள்ளது.



தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் ஊசிகள் போடுவதற்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி 600 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி தற்போது வரை ஒரு கோடியே 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், 37,32,000 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தடுப்பூசி திருவிழா காலத்தில், தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, பிரத்யேக தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.



இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 839 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,58,805 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,20,81,443     ஆகவும், மருத்துவ சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11,08,087     ஆகவும், மொத்தம் இறந்தோர் எண்ணிக்கை 1,69,275      ஆகவும், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 10,15,95,147 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம் வகிப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் நேற்று வரை 25,66,26,850 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்றும், இதில் நேற்று மட்டும் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 14,12,047 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை