தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி:

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி:

* இந்திய கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கும் தொற்று உறுதி

மதுரை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்த திருவில்லிபுத்தூர் காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மாதவராவ் (63), இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை அரசு வழிகாட்டுதல் முறைகளுடன் மதுரை தத்தனேரி மைதானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி(தனி), திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த மார்ச் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து 2 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 20ம் தேதி காலை, திருவில்லிபுத்தூரில் நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போதே அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்றே மதுரை கே. கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவருக்கு கொரோனா ெதாற்று உள்ளது என உறுதியானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்று காரணமாக அவரது நுரையீரல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மாதவராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செயற்கை சுவாச கருவிகள் ெபாருத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் தொடர்ந்தன.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7. 50 மணியளவில் அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் மதுரை, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அரசு வழிகாட்டுதல் படி, மாதவராவ் உடல், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, மதுரை தத்தனேரியில் உள்ள மயானத்தில், இன்று மாலை மாதவராவ் உடல் தகனம் செய்யப்படும் என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


்மாதவராவ் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கடந்த 1957ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் செல்லத்துரை.

எம். ஏ. , பி. எல் முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தில் வசித்து வந்த இவர், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் செய்து வந்தார்.
இவரது மனைவி சீதை, அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2015ம் ஆண்டு காலமாகி விட்டார்.

இவரது மகள் திவ்யா ராவ், திருமணமானவர்.   சென்னையில் வசித்து வருகிறார். தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 8 மாத கைக்குழந்தையுடன்  திருவில்லிபுத்தூர் வந்து, தந்தைக்காக தினமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும், திருவில்லிபுத்தூர் வந்து, மாதவராவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரவி (எ) சுப்பிரமணியம் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடைத்தேர்தல் வருமா?
வேட்பாளர் மரணத்திற்கு முன்னரே வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டதால், திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தெரிவித்துள்ளார். எனினும் திருவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ்தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதனால் அவர் வெற்றி பெற்றால், அதன் பின்னர் திருவில்லிபுத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை