பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா : உச்சம் தொடும்

தினமலர்  தினமலர்
பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா : உச்சம் தொடும்

சென்னை :'தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பரவிய கொரோனா தொற்று இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும்' என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசார கூட்டங்களில் எந்த ஒரு கட்சியும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பொது மக்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர். அதன்படி கொரோனா தொற்று இம்மாத இறுதிக்குள் உச்சத்தை தொடும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொது மக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. இதனால் ஒரே குடும்பத்தில் 10க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு எவ்வித அறிகுறியும் இல்லாத பலர் வெளியே சுற்றுகின்றனர். அவர்களை அடையாளம் காணுவது சவாலான பணி. அவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசம் மட்டுமே ஆயுதமாக உள்ளது. முக கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸ் ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு செல்லும் போது அதன் வீரியம் அதிகமாக உள்ளது.

தேர்தல் பிரசார கூட்டங்களிலும் இதே பிரச்னையை தான் மக்கள் சந்தித்துள்ளனர். எனவே தொற்று வேகம் அதிகரித்து இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும். அவ்வாறு அதிகரிக்கும் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தொற்றை தடுக்க அனைவரும் முக கவசம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினர்.

மூலக்கதை