சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:''சர்வதேச அளவிலான வளர்ச்சி வேகமெடுக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முக்கிய காரணிகளாக உள்ளன'' என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தொடரின் துவக்க நிகழ்ச்சியில் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும் மக்களின் வருவாயிலும் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சில நாடுகளில் இந்த வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளன.

வங்கி வட்டி விகிதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஏழை நாடுகள் அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் குறைந்த அளவுக்கு அந்நாடுகளில் குறையவில்லை. கடன் பெறுவதிலும் சமத்துவமின்மை நிலவுகிறது. சிறு வணிகர்கள் புதிதாக தொழில் துவங்க விரும்புவோர் பெண்கள் உள்ளிட்டோர் கடன் பெறுவதில் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுக்காதது கவலை அளிக்கிறது.இருந்தபோதிலும் இதில் மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி என்னவென்றால் இவ்வளவு நெருக்கடியிலும் சர்வதேச வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. இதில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன, என்றார்.

மூலக்கதை