கோஹ்லி–ரோகித் பலப்பரீட்சை * ஐ.பி.எல்., ‘விறு விறு’ ஆரம்பம் | ஏப்ரல் 08, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி–ரோகித் பலப்பரீட்சை * ஐ.பி.எல்., ‘விறு விறு’ ஆரம்பம் | ஏப்ரல் 08, 2021

சென்னை: ஐ.பி.எல்., திருவிழா இன்று துவங்குகிறது. முதல் சவாலில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, கோஹ்லியின் பெங்களூருவை சந்திக்கிறது.

இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் இன்று ஆரம்பாகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணி (2013, 2015, 2017, 2019, 2020), இதுவரை ஒரு கோப்பையை கூட ருசிக்காத பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கொரொனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கவுள்ளன.

‘ஹாட்ரிக்’ வாய்ப்பு

ஐ.பி.எல்., உலகின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா. இத்தொடரில் 5230 ரன்கள் (213 சிக்சர்) குவித்துள்ள இவர், மீண்டும் விளாச காத்திருக்கிறார். துவக்கத்தில் இஷான் கிஷான், குயின்டன் டி கான் ஜோடி, ‘மிடில் ஆர்டரில்’ வரும் சூர்யகுமார் யாதவ், ‘ஆல் ரவுண்டர்கள்’ ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா என பலரும் சிறப்பான ‘பார்மில்’ உள்ளனர்.

அதிக ரன் எடுத்த மும்பை வீரர்களில் இரண்டாவதாக உள்ள ‘பவர் ஹிட்டர்’ போலார்டு (3,023, 198 சிக்சர்) போட்டியை வெற்றிகரமாக ‘பினிஷிங்’ செய்யக்கூடியவர்.

பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா, டிரன்ட் பவுல்ட் கூட்டணி மிரட்டுகிறது. கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை விட்டுக்கொடுக்காதது தொடரும் பட்சத்தில் ‘ஹாட்ரிக்’ கோப்பை கைப்பற்றுவது நிச்சயம். தவிர ஆடம் மில்னே, உயரமான பவுலர் மார்கோ ஜான்சென் (6 அடி, 8 அங்குலம்) அணியில் இணைந்துள்ளது, பவுலிங்கை பலப்படுத்தியுள்ளது.

கோப்பை கனவு

கோஹ்லியின் பெங்களூரு அணி ஒவ்வொரு முறையும் பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்கும். கடைசியில் தடுமாறுவது வழக்கம். இந்த முறை எழுச்சி காணலாம். கொரோனாவில் இருந்து மீண்டதேவ்தத் படிக்கல்,கோஹ்லியுடன் இணைந்து வலுவான துவக்கம் தரலாம். களத்தில் கோஹ்லியின் கண்களில் தெரியும் ஆக்ரோஷம், அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும்.இளம் விக்கெட் கீப்பர் முகமது அசார், ‘மிடில் ஆர்டரில்’ டிவிலியர்ஸ்–மேக்ஸ்வெல் கூட்டணி ரன் மழை பொழியவேண்டும்.

சுமார் கூட்டணி

பெங்களூரு அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது. அனுபவமற்றமுகமது சிராஜ், நவ்தீப் சைனிகூட்டணி ரன்களை வாரி வழங்கும். தமிழகத்தின் இளம் சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’வாஷிங்டன் சுந்தர்மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மும்பையை போல, பெங்களூரு அணியிலும் 6 அடி, 8 அங்குலஉயரமுள்ளஜேமிசன்இருப்பது பலம்.சுழலில் சகால், மேக்ஸ்வெல் உதவலாம்.


ஐந்து மாதம்

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் எமிரேட்சில் (2020, செப். 10–நவ. 10) நடந்தது.  ஐந்து மாத இடைவெளியில் 14வது சீசன் இன்று இந்தியாவில் துவங்குகிறது.

 

புதிய விதிகள்

இன்று துவங்கும் ஐ.பி.எல்., தொடர் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

* 90 நிமிடம் மட்டும்

ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 14.11 ஓவர்கள் வீச வேண்டும். இதன் படி 5 நிமிடம் ‘டைம் அவுட்’, 85 நிமிடம் போட்டி என, மொத்தம் 90 நிமிடங்களில் (01:30 மணி நேரம்) 20 ஓவர்கள் வீச வேண்டும். மழை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஆகும் ஒவ்வொரு 4 நிமிடம், 15 வினாடிக்கு, தலா ஒரு ஓவர் குறைக்கப்படும்.

* ‘சாப்ட் சிக்னல்’ நீக்கம்

இம்முறை ‘சாப்ட் சிக்னல்’ விதி இருக்காது. ‘அவுட்’ என சொல்லும் முன், களத்தில் நிற்கும் அம்பயர்கள் ஆலோசிக்க வேண்டும். சந்தேகத்தை தெளிவுபடுத்த மூன்றாவது அம்பயரிடம் செல்ல வேண்டும். அவர் உறுதி செய்த பின், முடிவு தெரிவிக்கப்படும்.

* தொடரும் ‘அம்பயர் கால்’

‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் ‘எல்.பி.டபிள்யு.,’ அப்பீல் செய்யும் போது, பந்தின் 50 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி ‘ஸ்டெம்சில்’ பட்டால் மட்டுமே அவுட் தரப்படும். இல்லையென்றால் கள அம்பயர் கொடுத்த முடிவு தான் இறுதியானது. இந்த ‘அம்பயர் கால்’ முறை தொடரும்.

* மாறும் தீர்ப்பு

வீரர்கள் ரன் எடுப்பதை மூன்றாவது அம்பயர் கண்காணிப்பார்.

 

சென்னையில் ‘பத்து’

கொரோனா காரணமாக சென்னை, மும்பை, ஆமதாபாத், கோல்கட்டா, டில்லி, பெங்களூரு என 6 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடக்கவுள்ளன.

* எந்த அணியும் சொந்தமண்ணில் பங்கேற்காது என்பதால் உள்ளூர், வெளியே முறை இருக்காது.

* ஒவ்வொரு மைதானத்திலும் தலா 10 என, 60 போட்டிகள் நடக்கும்.

* ஆமதாபாத்தில் 6 லீக் சுற்று, 4 ‘பிளே ஆப்’ போட்டிகள் நடக்கும்.

* சென்னையில் இன்று முதல் ஏப். 25 வரை 10 போட்டிகள் நடக்கவுள்ளன.

 

ஆடுகளம் எப்படி

சென்னை ஆடுகளம் பொதுவாக சுழலுக்கு அதிகம் சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வேட்டை நடத்தலாம்.

 

19

மும்பை, பெங்களூரு அணிகள் 29 போட்டிகளில் மோதின. இதில் மும்பை 19ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. பெங்களூரு அணி 10ல் வென்றது.

* சென்னையில் இரு அணிகள் மோதவுள்ளது இதுதான் முதன் முறை.

 

97

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மூன்று சீசனில் (2015, 2018, 2019) ஒவ்வொரு அணிகளும் எடுத்த சராசரி ரன்குவிப்பில் ஐதராபாத் முதலிடத்தில் (169.50 ரன்) உள்ளது. ராஜஸ்தான் (156.00), சென்னை (154.06), கோல்கட்டா (147.33), டில்லி (124.00), பஞ்சாப் (116.50) அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இன்று  இம்மைதானத்தில் விளையாட உள்ள பெங்களூரு அணியின் சராசரி ரன் குவிப்பு 97.00 ஆக உள்ளது சோகம் தான்.

 

ரசிகர்களுக்கு ‘நோ’

ஐ.பி.எல்., தொடரின் 14 வது சீசனில் கொரோனா காரணமாக துவக்கவிழா இடம் பெறாது. இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி துவங்கும். போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

 

இது புதுமை

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்சர், பவுலர்கள் பந்து வீசும் வேகம் மட்டும் அதிகமாக கணக்கிடப்படும். முதன் முறையாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் பீல்டர்கள் பந்தை எடுக்க ஓடும் வேகம், பேட்ஸ்மேன்கள் எவ்வளவு வேகத்தில் ரன் எடுக்க ஓடினர் என்பதை இந்த ஐ.பி.எல்., தொடரில் கணக்கிட உள்ளனர்.

மூலக்கதை