ஜி.டி.பி.,க்கு நிகரான கடன் குறையும்: பன்னாட்டு நிதியம்

தினமலர்  தினமலர்
ஜி.டி.பி.,க்கு நிகரான கடன் குறையும்: பன்னாட்டு நிதியம்

வாஷிங்டன்:‘இந்தியாவில், ‘ஜி.டி.பி.,’ எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன் உயர்ந்துள்ள போதிலும், மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் காரணமாக, அது குறையும்’ என, பன்னாட்டு நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில், பன்னாட்டு நிதியத்தின், நிதி விவகாரங்கள் துறை துணை இயக்குனர், பாலோ மாரோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா தாக்கத்தால், 2019 டிச., – 2020 டிச., வரையிலான ஓராண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன், 74 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது மிகவும் அதிகம் தான்.

பணக்கார, வளரும் நாடுகளிலும் இத்தகைய உயர்வு காணப்படுகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதால், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன், விரைவில், 80 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இதற்கு, மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் துணை புரியும்.அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் தொடர முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு பட்ஜெட், அனைத்து தரப்பினர் நலனையும் உள்ளடக்கியதாக உள்ளது. அதேசமயம், பொது நிதிச் செயல்பாடுகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை, மக்களுக்கும், முதலீட்டா ளர்களுக்கும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு, நம்பகத்தன்மையுள்ள இடைக்கால நிதிச் செயல்பாட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை