'பின்க், நேர்கொண்ட பார்வை' வெற்றியைத் தொடருமா 'வக்கீல் சாப்' ?

தினமலர்  தினமலர்
பின்க், நேர்கொண்ட பார்வை வெற்றியைத் தொடருமா வக்கீல் சாப் ?

தெலுங்குத் திரையுலகில் பவர்புல்லான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். சினிமா, அரசியல் இரண்டிலும் காலடி வைத்துள்ளவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'அஞ்ஞாதவாசி'. 2018ம் ஆண்டில் வெளிவந்த அந்தப் படம் தோல்வியைத்தான் தழுவியது. அதற்குப் பின் அரசியலில் தீவிரம் காட்டினார்.

2019ம் ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தார். கடந்த மூன்று வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை. ஒரு கட்டத்தில் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

அதில் முதலாவதாக 'வக்கீல் சாப்' படம் நாளை(ஏப்., 9) வெளியாகிறது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த 'பின்க்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஆனால், தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தைத்தான் தெலுங்கு ரீமேக்கிற்கு அடிப்படையாக வைத்துள்ளார்கள்.

இரண்டு மொழிகளிலும் கிடைத்த வரவேற்பு தெலுங்கிலும் கிடைக்கும் என டோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள். மூன்று வருடங்களாக பவன் கல்யாண் நடித்து படம் வெளிவராததால் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்களாம். அதன் காரணமாகத்தான் டிரைலருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள்.

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகம் சில வெற்றிப் படங்களைக் கொடுத்து சமாளித்துவிட்டது. அது இப்படத்திலும் தொடரும் என அவர்கள் நம்புகிறார்கள்.

மூலக்கதை