புது எம்.எல்.ஏ.,க்களுக்காக 'ஜம்' மென்று தயாராகுது 'ஜிம்'

தினமலர்  தினமலர்
புது எம்.எல்.ஏ.,க்களுக்காக ஜம் மென்று தயாராகுது ஜிம்

சென்னை: புதிதாக பொறுப்பேற்கவுள்ள, எம்.எல்.ஏ.,க்களுக்காக, சென்னையில் உள்ள விடுதியில், உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது.தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்கள், அலுவல் காரணமாக, சென்னை வரும் போது தங்குவதற்கு, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், விடுதி கட்டப்பட்டு உள்ளது.

இந்த விடுதியில், சென்னையை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, எம்.எல்.ஏ.,க்களுக்கும் அறைகள் ஒதுக்கப்படுகின்றன.பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த விடுதிகளை, பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. விடுதிகளில், எம்.எல்.ஏ.,க்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சட்டசபை செயலகம் வாயிலாக, அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கு, 4 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த நிதியில், எம்.எல்.ஏ.,க்கள் விடுதியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைத்தல், மழை நீர் கால்வாய் கட்டுதல், நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, எம்.எல்.ஏ.,க்கள் உடற்பயிற்சி செய்வதற்கு, குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம், 'பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், ஸ்நுாக்கர்' உள்ளிட்ட, விளையாட்டு களுக்காக உள் விளையாட்டு அரங்கமும் தயாராகி வருகிறது. முழுதும் இரும்பு துாண்களை கொண்டு உடற்பயிற்சி கூடம் மற்றும் உள்விளையாட்டு அரங்க பணிகள் நடந்து வருகின்றன.

நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை, மே, 2ம் தேதி நடக்கிறது. அதன்பின், பதவி ஏற்பு விழாவும், சட்டசபை கூட்டமும் நடக்கவுள்ளது. எனவே, அதற்கு முன்பாக, புதிய எம்.எல்.ஏ.,க்களின் வசதிக்காக, உடற்பயிற்சி கூடம் மற்றும் உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை முடிக்க, பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை