மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4ம் கட்டமாக 44 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 4ம் கட்டமாக 44 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, இத்தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இத்தேர்தலில் 56 லட்சத்து 98 ஆயிரத்து 218 பெண்கள் உள்பட  1 கோடியே 15 லட்சத்து 81,022 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். ஹவுரா, கூச் பெஹரில் தலா 9, தெற்கு 24 பர்கானாவில் 11, அலிபுர்துவாரில் 5, ஹூக்ளியில் 10 என மொத்தமுள்ள 44 தொகுதிகளில் 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதற்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக 15,940 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 44 தொகுதிகளும் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளதால், 789 கம்பெனி ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூச் பெஹரில் மட்டும் 187 கம்பெனி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.10 நோட்டீஸ் வந்தாலும் எனது பதில் ஒன்றுதான்டோம்ஜூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ``சாதி, சமூக, மத அடிப்படையில் வாக்காளர்களை பிரிப்பதை திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இந்து, முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும் சூழ்ச்சிக்கு எதிராகவே பேசுவேன். இதற்காக தேர்தல் ஆணையம் எனக்கு 10 நோட்டீஸ் அனுப்பினாலும் பரவாயில்லை. அதற்காக என்னுடைய நிலைபாட்டை மாற்றி கொள்ள மாட்டேன். எனது பதில் ஒன்றுதான்,’’ என்றார்.

மூலக்கதை