சட்டீஸ்கரில் நக்சல்களால் கடத்தப்பட்ட வீரர் விடுதலை

தினகரன்  தினகரன்
சட்டீஸ்கரில் நக்சல்களால் கடத்தப்பட்ட வீரர் விடுதலை

புதுடெல்லி: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 3ம் தேதி பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்கள் சுற்றிவளைத்து தாக்கியதில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் காயமடைந்தனர். மேலும், நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் கோப்ரா சிறப்பு அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹால் காணாமல் போனார். ஜம்முவை சேர்ந்த இவர் தங்களின் பிடியில் இருப்பதாக நக்சல்கள் இருதினங்களுக்கு முன் அறிவித்தனர். இதனை தொடர்ந்து நக்சல்கள் பிடியில் இருந்து வீரரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், வீரரை மீட்பது தொடர்பான நடவடிக்கையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை இயக்குனர் ஜெனரல் சுந்தர்ராஜ் நேற்று காலை தெரிவித்து இருந்தார். மேலும், அவரை விடுவிப்பதற்காக நக்சல்கள் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மாநிலஅரசு பரிந்துரைத்த பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் உட்பட 2 பேர் நக்சல்களுடனான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின், நக்சல்கள் பிடியில் இருந்த வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹால் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை