100 கோடி லஞ்ச விவகாரம் சிபிஐ விசாரணைக்கு எதிரான மகாராஷ்டிரா மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
100 கோடி லஞ்ச விவகாரம் சிபிஐ விசாரணைக்கு எதிரான மகாராஷ்டிரா மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

மும்பை:  மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். இவர் மும்பையில் உள்ள பார்கள், விடுதிகளில் இருந்து மாதந்தோறும் ₹100 கோடி வசூல் செய்து தர வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டதாக மும்பை நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பரம்பீர் மனு தாக்கல் செய்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி ஆலோசனை வழங்கியது. இந்த மனு மீது விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றம், அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா மாநில அரசும், முன்னாள் அமைச்சர் தேஷ்முக்கும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் நீதபிதிகள் எஸ்கே. கவுல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, `தேஷ்முக்கிற்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மூத்த அமைச்சர் குறித்து மூத்த அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டி இருப்பதால், முதல் கட்டமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் தவறு எதுவுமில்லை,’ என்று கூறிய நீதிபதிகள், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை