நிதியுதவி செய்தால் மட்டுமே தடுப்பூசி தயாரிக்க முடியும் மத்திய அரசுக்கு சீரம் திடீர் நிபந்தனை

தினகரன்  தினகரன்
நிதியுதவி செய்தால் மட்டுமே தடுப்பூசி தயாரிக்க முடியும் மத்திய அரசுக்கு சீரம் திடீர் நிபந்தனை

* கடனாக வேண்டாம்; மானியமாகதான் தர வேண்டும்* கோவிஷீல்டு சப்ளை பாதிப்பால் வெடித்தது மோதல்புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு சப்ளை தொடர்பாக மத்திய அரசுக்கும், சீரம் நிறுவனத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ‘மத்திய அரசு நிதியுதவி அளித்தால் மட்டுமே கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும்,’ என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘இதை மானியமாக மட்டுமே வழங்க வேண்டும். கடனாக வழங்கக் கூடாது,’ என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், பிரிட்டன் - ஸ்வீடன் கூட்டு நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களில் மக்களுக்கு இது அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. புனேவை சேர்ந்த சீரம் மருந்து நிறுவனம், இந்த தடுப்பூசியை தயாரித்து சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் செய்துள்ளது. உலகிலேயே தடுப்பூசியை தயாரிப்பதற்கான பிரமாண்டமான தொழில்நுட்பமும், வசதிகளும் சீரம் நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு இந்த நிறுவனம், இந்திய அரசின் மூலமாக இந்த தடுப்பூசியை சப்ளையை செய்து வருகிறது.இந்நிலையில், கடந்த ஜனவரியில் சீரம் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தீ விபத்தால் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. உலகளவில் கோவிஷீல்டு தடுப்பூசியை சப்ளை செய்து இந்தியா நெற்பெயர் பெறுவதை தடுப்பதற்காக, சில சர்வதேச நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செய்த நாசவேலையாகவும் இந்த தீ விபத்து இருக்கக்கூடும் என்று சந்தேகம் நிலவுகிறது. உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளதால், மத்திய அரசுக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசியை தயாரித்து வழங்க முடியவில்லை. மேலும், 75க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படியும் மருந்தை சப்ளை செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையிலும், நெருக்கடியிலும் சீரம் நிறுவனம் தவித்து வருகிறது. தீ விபத்தால் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக, சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் புனேவாலா ஏற்கனவே கூறியுள்ளார். கோவிஷீல்டு சப்ளையை சமாளிக்க வேண்டும் என்றால், கூடுதல் உற்பத்தி பிரிவுகளை அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், தன்னிடம் அந்தளவுக்கு நிதி இல்லை என்று புனேவாலா கூறியுள்ளார்.இது பற்றி ஆதார் புனேவாலா அளித்துள்ள பேட்டி வருமாறு:கோவிஷீல்டு தடுப்பூசியை ஒப்பந்தப்படி தயாரித்து, சப்ளை செய்யாத காரணத்தால், எங்கள் நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீசை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அனுப்பி இருப்பது உண்மைதான். நோட்டீசில் கூறப்பட்டுள்ள விவரங்களை வெளிப்படையாக கூற முடியாது. இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் தெரியும். அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க, முயற்சிகள் செய்து வருகிறோம். இந்திய அரசுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை சப்ளை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால், உலக நாடுகளின் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது பற்றி மத்திய அரசும் ஆலோசனை நடத்தி வருகிறது. புதிய உற்பத்தி பிரிவை தொடங்கி, உற்பத்தியை 2 மடங்காக அதிகரிப்பதற்கான திட்டத்தை, மத்திய அரசிடம் சீரம் அளித்துள்ளது. எங்கள் நிறுவனத்தின் கட்டமைப்பு வசதிகளுக்காக ஏற்கனவே பல ஆயிரம் கோடியை நாங்கள் முதலீடு செய்து இருக்கிறோம். நிறுவனத்தின் கூடுதல் செயல்பாட்டு செலவுகளுக்காக இந்த மாதம் ரூ.1500 கோடி கடனும் வாங்கி இருக்கிறோம். மத்திய அரசிடம் நாங்கள் அளித்துள்ள திட்டத்துக்கான தீர்வு, அடுத்த 7 நாட்களில் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். தடுப்பூசி உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும் என்றால், எங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். அதை கடனாக இருக்கக் கூடாது. மானியமாக வழங்க வேண்டும். எங்களுக்கு கடன் தேவைப்பட்டால், வங்கிகளில் இருந்து அதை எளிதாக பெற முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஒரு எண்ணம் எங்கள் நிறுவனத்துக்கு இல்லை. கூடுதல் தடுப்பூசி தயாரிக்கப்பட வேண்டும் என்றால், கூடுதல் உற்பத்தி பிரிவுகளை எங்கள் நிறுவனம் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். எனவே, இதற்கு மத்திய அரசிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த உதவி கிடைத்தால், அடுத்த 2 மாதங்களில் தடுப்பூசி உற்பத்தியை 2 மடங்காக அதிகரித்து, வேண்டிய அளவுக்கு எங்களால் சப்ளை செய்ய முடியும். முதலில் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்து விட்டால், பிறகு உலக நாடுகளுக்கு வேண்டி அளவுக்கு கோவிஷீல்டை எங்களால் சப்ளை செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.அஸ்ட்ராஜெனகாவின் நோட்டீஸ் தான் காரணம் கோவிஷீல்டு தடுப்பூசியை ஒப்பந்தப்படி தயாரித்து சீரம் நிறுவனம் சப்ளை செய்யாததால், அதன் மீது அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இது தொடர்பாக, சீரம் நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக அது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது, சீரம் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த மோதல் காரணமாக, தனது ஒப்பந்தத்துக்கு ஆபத்து நேரிடலாம் என்ற அச்சமும் அதற்கு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் விவகாரம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் காரணமாகவே, மத்திய அரசுடன் சீரம் நிறுவனத்துக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் காரணமாகவே, இந்நிறுவனத்தின் தலைவர் ஆதார் புனேவாலா, நிதி பிரச்னை பற்றி வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார் என கருதப்படுகிறது.நாடு முழுவதும் 3 மாதத்தில் 9.1 கோடி பேருக்கு தடுப்பூசிஇந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், முன்கள பணியாளர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 34 லட்சத்து 30 ஆயிரத்து 502 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* ஜனவரி 16 முதல் நேற்று வரையில், நாடு முழுவதும் 9 கோடியே 1 லட்சத்து 98 ஆயிரத்து 673 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.* இதுவரை 89 லட்சத்து 68 ஆயிரத்து 304 சுகாதாரப் பணியாளர்கள், 97 லட்சத்து 67 ஆயிரத்து 538 முன்களப் பணியாளர்கள் முதல் டோஸ் போட்டுள்ளனர். 54 லட்சத்து 18 ஆயிரத்து 84 சுகாதார பணியாளர்களும், 44 லட்சத்து 11 ஆயிரத்து 609 முன்களப் பணியாளர்களும் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.* இது தவிர, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 கோடியே 63 லட்சத்து 32 ஆயிரத்து 581 பேர் முதல் டோசும், 11 லட்சத்து 39 ஆயிரத்து 291 பேர் 2வது டோசும் போட்டுள்ளனர்.* 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 94 ஆயிரத்து 487 பேர் முதல் டோசும், 4 லட்சத்து 66 ஆயிரத்து 662 பேர் 2வது டோசும் போட்டுள்ளனர்.2ம் டோஸ் தடுப்பூசி போட்டார் மோடிபிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 1 தேதி, இந்திய தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். முதல் டோஸ் எடுத்து 37 நாட்களான நிலையில், நேற்று அவர் 2வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் புகைப்படத்தை இணைத்து மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2வது தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். கொரோனாவை தோற்கடிப்பதற்கான வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு தகுதியானவராக இருந்தால், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்,’ என கூறியுள்ளார். மோடிக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்ட புதுச்சேரியை சேர்ந்த நர்ஸ் நிவேதாவும், பஞ்சாப்பை சேர்ந்த நர்ஸ் நிஷாவும் தான் நேற்றும் அவருக்கு தடுப்பூசியை போட்டனர்.இந்தியர்களுக்கு நியூசி. தடைநியூசிலாந்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். இதனால், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தடை விதித்துள்ளார். இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் இருந்து வருபவர்கள் நியூசிலாந்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் 28ம் தேதி வரையில் இந்த தடை அமலில் இருக்கும். நியூசிலாந்து குடிமக்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் என அனைத்து பயணிகளும் நியூசிலாந்து வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 130 கோடி டோஸ் தயாரிக்கும்* சீரம் நிறுவனத்தின் முழு பெயர், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா.’ மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரத்தில் செயல்படுகிறது.* நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையும், முக்கிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் உலகளவில் அதிகம் தயாரிக்கும் நிறுவனம் இதுதான்.* தனியார் மருந்து நிறுவனமான இது, 1966ம் ஆண்டில் சைரஸ் எஸ். பூனேவாலா எனும் பார்சி நபரால் தொடங்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் ஆதார் பூனேவாலா.* இந்த நிறுவனம் ஆண்டுக்கு 130 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. * மாதத்துக்கு 11 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்கிறது.* காச நோய், இளம்பிள்ளை வாதம், குழந்தைகளுக்கான பல்வேறு தடுப்பூசி மருந்துகள், பாம்பு,  நாய் கடிகளுக்கான விஷ முறிவு மருந்துகளையும் இது உற்பத்தி செய்கிறது.* கடந்த 2009 முதல் ‘எச்1என்1’ எனப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்தையும் உற்பத்தி செய்து வருகிறது.5 லட்சம் டோஸ் வீண் மகாராஷ்டிரா மீது மத்திய அரசு புகார்தனது மாநிலத்தில் மக்களுக்கு அளிப்பதற்கு போதுமான அளவுக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று சில தினங்களுக்கு முன் மத்திய அரசு மீது மகாராஷ்டிரா அரசு குற்றம்சாட்டியது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிரா அரசு சரியான திட்டமிடுதல் இல்லாமல், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை வீணடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த மாநிலத்திடம் 23 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. இதை இன்னும் 5 முதல் 6 நாட்களுக்கு பயன்படுத்தலாம். தடுப்பூசியை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமை,’’ என்றார்.

மூலக்கதை