அலுவலகத்துக்கு பூட்டு போட்டு இங்கிலாந்து தூதரை தெருவில் நிறுத்திய மியான்மர் ராணுவம்: இரவு முழுவதும் காரில் தங்கினார்

தினகரன்  தினகரன்
அலுவலகத்துக்கு பூட்டு போட்டு இங்கிலாந்து தூதரை தெருவில் நிறுத்திய மியான்மர் ராணுவம்: இரவு முழுவதும் காரில் தங்கினார்

லண்டன்: இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு பூட்டு போட்டு, தூதரை இரவு முழுவதும் ரோட்டில் நிறுத்திய மியான்மர் ராணுவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இங்கிலாந்துக்கான மியான்மர் நாட்டு தூதராக பணியாற்றியவர் கியாவ் ஜவார் மின். லண்டனில் இந்த தூதரக அலுவலகம் உள்ளது. இவர் மியான்மரில் கடந்த பிப்ரவரியில் நடந்த ராணுவ புரட்சியை கடுமையாக விமர்சித்தார். இவரது பேச்சினால் கவரப்பட்ட மியான்மர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்று ராணுவத்துக்கு எதிராக இவர் குரல் கொடுத்தார்.  இந்நிலையில், ஜவாரின் தூதர் பதவியை நேற்று முன்தினம் இரவு மியான்மர் அரசு திடீரென பறிந்தது. அவரை தூதரக அலுவலகத்துக்குள் நுழைய் விடாமல் தடுத்தது. இதற்காக, தூதரகத்தின் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டது. இதனால், அவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தனது காரிலேயே தங்கி இருந்தார். தூதரகத்தில் பணியாற்றிய இதர அதிகாரிகள், ஊழியர்களும் உடனடியாக வெளியேறும்படி மியான்மர் ராணுவத்தினரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பேசிய இங்கிலாந்து வெளியுறவு செயலளர் டொமினிக் ராப், `மியான்மர் ராணுவத்தின் இக்கொடூர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கியாவ் ஜாவரின் வீரத்துக்கு தலைவணங்குகிறேன். மியான்மரில் நடைபெறும் ராணுவ சதி, வன்முறைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அங்கு மீண்டும் விரைவில் ஜனநாயகம் மலர வேண்டும்,’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை