மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை :'பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம், சானிடைசர் வழங்குங்கள்; மக்களுக்கான பணியை எப்போதும் போல, இப்போதும் தொடர ஒன்றிணைவோம் வா' என, தொண்டர்களுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தல் நேரம் மட்டுமின்றி, எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் கட்சி தி.மு.க., தான். கடந்தாண்டு இதே கால கட்டத்தில், கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவும் வகையில், 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல்பாட்டை, தி.மு.க., துவக்கியது. இதன் வாயிலாக, கட்சி பாகுபாடின்றி, அனைத்து தரப்பினருக்கான உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தந்தோம். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தொண்டாற்றினர்.இந்த கோடை காலத்தில், மக்களின் தாகம் தணிக்க, தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து, டாக்டர்களும், மக்கள் நல்வாழ்வு துறையும் எச்சரித்திருப்பதால், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முக கவசம், சானிடைசர் வழங்குங்கள். தேர்தல் முடிவுகளில், நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை, எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட, 'ஒன்றிணைவோம் வா'ருங்கள்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ.4 லட்சம் நிதியுதவி



கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக, இதுவரை, 5.23 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் பிப்., மார்ச் மாதங்களில், வட்டியாக கிடைத்த தொகையில், மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம், 16 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 4 லட்சம் ரூபாயை ஸ்டாலின் வழங்கினார்.

மூலக்கதை