தமிழகம் முழுதும் விழுந்தது 50 சதவீதம் கட்டுப்பாடு...

தினமலர்  தினமலர்
தமிழகம் முழுதும் விழுந்தது 50 சதவீதம் கட்டுப்பாடு...

சென்னை:தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, முதல் கட்டமாக, 50 சதவீத கட்டுப்பாடுகளை, அரசு அறிவித்துள்ளது. அவசியமற்ற கூட்டங்களுக்கு, முழு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலத்தவர்களுக்கு, 'இ - பாஸ்' நடைமுறை கட்டாயமாகி உள்ளது. திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும், வணிக வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கும், நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது இடங்களில், மக்கள் முக கவசம் அணிவதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதாலும், சமீப காலமாக கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது.அதன் காரணமாக, மார்ச் 28ல், 13 ஆயிரத்து, 70 பேர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம், அந்த எண்ணிக்கை, 27 ஆயிரத்து, 743 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, பொது மக்கள் நலன் கருதி, நோய் தொற்றை கட்டுப்படுத்த, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு, முற்றிலுமாக தடை விதிக்கவும், சில செயல்பாடுகளுக்கு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கவும், அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, மறு உத்தரவு வரும் வரை, சில செயல்பாடுகளுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகள்:* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.

* நோய் கட்டுப்பாடு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி, ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

* திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு, நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.

* நாளை முதல் சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில், சில்லரை வியாபார காய்கனி அங்காடிகளுக்கு மட்டும், தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டங்களில் உள்ள, மொத்த வியாபார காய்கனி வளாகங்களில், சில்லரை வியாபார கடைகளுக்கு, தடை விதிக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகளுடன் அனுமதிகீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு, ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நடைமுறைகள், நாளை முதல் அமலுக்கு வரும்.
* தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

* கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முக கவசம் அணிவதையும், நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். முக கவசம் அணியாமல் இருப்போரை, கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது.

* ஏற்கனவே உள்ள, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும். அங்கு பணிபுரிவோருக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப, தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை, தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாவட்டங்களுக்கு இடையிலான, அரசு மற்றும் தனியார் பஸ், சென்னை மாநகர பஸ் ஆகியவற்றில், அவற்றில் உள்ள இருக்கைகளில் மட்டும், பயணியர் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்று கொண்டு பயணம் செய்ய, அனுமதி கிடையாது.
* அதேபோல, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா செல்லும் பஸ்களிலும், இருக்கைகளில் மட்டும் பயணியர் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். நின்றபடி பயணம் செய்ய, அனுமதி இல்லை.

* காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட, அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், இரவு, 11:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்கள் இரவு, 11:00 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். 'பார்சல்' சேவையும், இரவு, 11:00 மணி வரை அனுமதிக்கப்படும்.

* கேளிக்கை விடுதிகள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.
* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் என, பொதுமக்கள் கூடும் இடங்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

* திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் என, அனைத்து திரையரங்குகளும், 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படலாம்.

* உள் அரங்குகளில், அதிகபட்சமாக, 200 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.

* திருமண நிகழ்வுகளில், 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில், 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.
* விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் இல்லாமல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். நீச்சல் குளங்களில், விளையாட்டுப் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* பொருட்காட்சி அரங்கங்கள், வர்த்தகர்களுக்கு இடையிலான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் வழிபாடு, இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படும். ஆனால், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

* சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள், தொடர்ந்து அனுமதிக்கப்படும். இதில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில், டிரைவர் தவிர்த்து, மூன்று பயணியர் மட்டும் பயணிக்கலாம்.
* ஆட்டோக்களில், டிரைவர் தவிர்த்து, இருவர் மட்டும் பயணிக்கலாம்.

* ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர, பிற வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க, 'இ - பாஸ்' முறை செயல்படுத்தப்படும்.இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

தொற்று பரவலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்!


சென்னை மாநகராட்சி பகுதிகளில், நோய் தொற்றை குறைக்க, ஒவ்வொரு மண்டலத்திற்கும், கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் மக்கள், வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் வாயிலாக, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவர். அப்பகுதி மக்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க, உதவி புரிய, தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர்.கொரோனா பரவலை தடுக்க, பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ வேண்டும். வெளியில் செல்வதை தவிர்த்தால் தான், நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்தவும், வீடுதோறும் சென்று, காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை, தினமும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.தொற்று ஏற்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளவும், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர், கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால், தாமதமின்றி உடனடியாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

மூலக்கதை