கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் வேண்டாம்

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் வேண்டாம்

புதுடில்லி:''பல மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருவது, கவலையளிக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், மாநில அரசுகள் சிறிதும்அலட்சியம் காட்டக் கூடாது.

வரும், 11 - 14ம் தேதி வரை, நாடு முழுதும் தகுதியுள்ளஅனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நம் நாட்டில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், தொற்று பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.மஹாராஷ்டிராவில், தினமும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆலோசனைஇந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று ஆலோசனை நடத்தினார்; இதில், பிரதமர் பேசியதாவது:
கொரோனாவின் இரண்டாவது அலை பரவல், முதல் அலையை விட தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டு, மக்களிடம் இருந்த கட்டுப்பாடுகள் இப்போது இல்லை.தொற்று விழிப்புணர்வு இன்றி, மக்கள் அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது. நிர்வாகத்திலும் அலட்சியம் உள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக, இந்த அலட்சியம் ஏற்பட்டிருக்கலாம்; இது தவறு.மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில், இதுவரை இல்லாத அளவில், ஒருநாள் பாதிப்பு அதிக மாக உள்ளது, பெரும் கவலையளிக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க, மீண்டும் பொது ஊரடங்கை அமல்படுத்த தேவையில்லை. வைரசுக்கு எதிராக, நாம் தீவிரமாக போராட வேண்டியது அவசியம் தான். ஆனால், கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கான அனுபவம், நமக்கு இப்போது உள்ளது. அத்துடன் தடுப்பூசிகளும் உள்ளன. தேவையான, உள்கட்டமைப்பு வசதிகள் இப்போது உள்ளன.
கொரோனா பரவலை தடுக்க, இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதை, உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.வைரஸ் பாதிப்பை தடுக்க, இரவு, 9:00 அல்லது 10:00 மணி முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்; இதை, கொரோனா ஊரடங்கு என, அழைக்க வேண்டும்.

தாரக மந்திரம்தொற்று பரிசோதனைகளை, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும். இதில், சிறிதும் அலட்சியம் கூடாது. தொற்று தடுப்பு நடவடிக்கைளை, மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்; அதை, அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை, நாம் தீவிரப்படுத்த வேண்டும். பரிசோதனை, கண்டுபிடிப்பு, சிகிச்சை ஆகியவை தான், தொற்று தடுப்பில், தாரக மந்திரமாக இருக்க வேண்டும்; இதை நாம், சரியாக செயல்படுத்தினால், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். வரும், 11 - 14ம் தேதிகளில், நாடு முழுதும் தடுப்பூசி விழாவை மேற்கொள்வோம். இந்த நான்கு நாட்களில், தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் கூடாது, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை, மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமருக்கு இரண்டாவது தடுப்பூசிபிரதமர் மோடி, மார்ச், 1ம் தேதி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 'கோவாக்சின்' தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று சென்ற பிரதமர், இரண்டாவது, 'டோஸ்'தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த நர்ஸ் நிவேதா உதவியுடன், பஞ்சாபைச் சேர்ந்த நர்ஸ் நிஷா சர்மா, தடுப்பூசி போட்டார். பிரதமருக்கு தடுப்பூசி போட்டது பற்றி நிஷா சர்மா கூறுகையில், ''என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது,'' என்றார். தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பாக, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கொரோனாவை எதிர்கொள்வதில் தடுப்பூசி போட்டுக்கொள்வதும், ஒரு முக்கிய வழி. எனவே, தகுதியுள்ள அனைவரும், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்ட, 'கோவின்' செயலியிலும், தான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதை, புகைப்படத்துடன் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

தமிழக அதிகாரிகள்பங்கேற்புபிரதமர் தலைமையில், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலர் ராஜிவ்ரஞ்சன், டி.ஜி.பி., திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, அதிகாரிகள் விளக்கினர். பிரதமர் கூறிய ஆலோசனைகளையும் செயல்படுத்துவதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

மூலக்கதை