இந்தியர்கள் வருகை நியூசிலாந்தில் தடை

தினமலர்  தினமலர்

வெலிங்டன்:இந்தியாவில், கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, இந்திய பயணியர் நியூசிலாந்து வர, இரண்டு வாரங்களுக்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

நியூசிலாந்தில் இதுவரை, 2,531 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக புதிய தொற்று பரவல் இல்லாதிருந்த நிலையில், புதிதாக, 23 பேருக்கு தொற்று, நேற்று உறுதியானது. இதில், 17 பேர், இந்தியாவில் இருந்து, சமீபத்தில் நியூசிலாந்து சென்றவர்கள்.

இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விபரம்:கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நாடுகளை, நியூசிலாந்து அரசு கண்காணித்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது அலை துவங்கியுள்ள நிலையில், நியூசிலாந்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இம்மாதம், 28ம் தேதி வரை, இரண்டு வார காலத்திற்கு, இந்திய பயணியர் நியூசிலாந்து வர தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை, இந்தியா சென்றுள்ள நியூசிலாந்து குடிமக்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கும் பொருந்தும்.இது பயணியருக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்தாலும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பயணியரின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் தற்காலிக தடை விதிக்க வேண்டிய நிலை உள்ளது.

தொற்று பரவல் அதிகமுள்ள மற்ற நாடுகளில் இருந்து, நியூசிலாந்து வரும் பயணியர் எண்ணிக்கை மிக குறைவாகவே இருப்பதால், அவர்களுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை