'ஆன்லைன்' கல்வியில் சாதனை: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு

தினமலர்  தினமலர்
ஆன்லைன் கல்வியில் சாதனை: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு

புதுடில்லி:கொரோனா ஊரடங்கு காலத்தில், 'ஆன்லைன்' வாயிலாக கல்வி கற்பிப்பதில், இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா ஊரடங்கின் போது, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இது தொடர்பாக, ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், ஆய்வறிக்கை சமர்பித்துள்ளது.இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்த கல்வி நிபுணர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களின் கருத்துக்களை பெற்று, இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:உலகம் முழுவதும் உள்ள, 170 கோடி மாணவர்கள், ஒரு ஆண்டாக ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கும் நிலை உள்ளது. இந்த புதிய முறை கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எப்படி தங்களை தயார் செய்து கொண்டனர் என்பது குறித்து ஆய்வு நடத்தினோம். வரும் காலத்தில், 'டிஜிட்டல்' கல்வி முறையில் பல புதிய பரிமாணங்கள் ஏற்படும் என்பதையும் கணித்துள்ளோம்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஆன்லைன் கல்வி முறையில், 5க்கு, 3.3 புள்ளிகள் பெற்று, இந்தியா, மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது.டிஜிட்டல் உபகரணங்கள் அனைவருக்கும் கிடைப்பதில் ஏற்றத்தாழ்வுகளும், இணையதள இணைப்பு கிடைப்பதில் சிரமங்கள் இருந்தது, குறைபாடாக கருதப்படுகிறது.

ஆன்லைன் வாயிலாக கல்வி பயில்வது சீரழிவைத் தரும் என, 71 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர். டிஜிட்டல் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியது இந்திய அரசின் முக்கிய கடமை. மேலும், கிராமப்புறங்களில் இணையதள இணைப்புகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டியதும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை