'அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயகத்துக்கு பெரும் சவால்'

தினமலர்  தினமலர்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயகத்துக்கு பெரும் சவால்

வாஷிங்டன்:''அமெரிக்கா, இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில், ஜனநாயகம் கடும் சவாலை சந்திக்கிறது,'' என, இந்தியாவை பூர்வீகமாக உடைய, அமெரிக்க பார்லிமென்ட், எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சர்வதேச மனசாட்சி தினம், ஏப்., 5ல் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது:கடந்த, ஜன., 6ல், அமெரிக்க பார்லி.,க்குள் நுழைந்து, சிலர் தாக்குதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாக, அமெரிக்காவின் பல இடங்களில், ஆசியாவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மதம், இனம், பின்புல பாகுபாடு இல்லாமல், அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும். அமெரிக்காவில் ஜனநாயக அமைப்புகள் மிகப் பெரிய சவாலை சந்திக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.நான் பிறந்த, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும், அமெரிக்காவைப் போலவே பல மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். அனைத்து மதத்தினரும், தாங்கள் சுதந்திரமாக வாழ்வதாக உணர வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், பல்வேறு திட்டங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.

அது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடுவதில் இருந்து, சீனாவின் மூர்க்கத்தனத்தை எதிர்ப்பதில் இருந்து, பொருளாதாரத்தை உயர்த்துவது வரையில், அதன் தாக்கம் இருக்கும். அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில், ஜனநாயகம் மிகப் பெரும் சவாலை சந்திக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை