மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மாநில பா.ஜ., வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மாநில பா.ஜ., வலியுறுத்தல்

மும்பை:''ஊழல் வழக்குகளில், அமைச்சர்கள் சிக்கி பதவியிழந்து வருகின்றனர். இதைவிட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேறு என்ன காரணம் வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

புலனாய்வுமஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.தேசியவாத காங்.,கைச் சேர்ந்த, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ஊழல் புகார் கூறினார்.

அதைஅடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இந்த நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார். அவரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

'நான் இன்ஸ்பெக்டர் பதவியில் தொடருவதற்கு, 2 கோடி ரூபாய் தரும்படி, அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் கேட்டார். 'அந்தப் பணத்தை, கான்ட்ராக்டர்களிடம் இருந்து வசூலிக்கும்படி, சிவசேனாவைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர், அனில் பராப் கூறினார்' என, சச்சின் வாஸே எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது.

இது குறித்து, மஹாராஷ்டிர பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளதாவது:ஊழல் வழக்கில், ஒரு அமைச்சர், ராஜினாமா செய்துள்ளார். அடுத்து மற்றொரு அமைச்சரும் பதவி விலக வேண்டிய நிலை யில் உள்ளார். 15 நாட்களுக்குள், இரண்டு அமைச்சர்கள், ஊழல் வழக்கில் ராஜினாமா செய்ய உள்ளனர். இதைவிட மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்வதற்கு வேறு என்ன காரணம் வேண்டும். ஆனால், அதை பா.ஜ., வலியுறுத்தாது.

மாநிலத்தில் நடக்கும் விஷயங்களை பார்க்கும் அரசியல் நிபுணர்கள், ஏன் ஜனாதி பதி ஆட்சியை அமல்படுத்தக் கூடாது என்பதை தெரிவிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி அரசு''வாஸேயின் கடிதம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்,'' என, பா.ஜ., வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.''சிவசேனா தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்க்க, மோசமான அரசியல் நடத்துகின்றனர். கைது செய்யப் பட்டு உள்ள, சச்சின் வாஸேயை கட்டாயப்படுத்தி கடிதம் எழுத வைத்துள்ளனர்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா மாநில அரசு, மஹா வசூல் செய்யும் அரசாக மாறிவிட்டது. ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிப்பதற்கு, அந்த அரசுக்கு தகுதியில்லை. உடனடியாக, பதவி விலக வேண்டும்.

பிரகாஷ் ஜாவடேகர்,

மத்திய அமைச்சர் பா.ஜ.,

மூலக்கதை