சிறந்த வீரர் புவனேஷ்வர்: ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை | ஏப்ரல் 08, 2021

தினமலர்  தினமலர்
சிறந்த வீரர் புவனேஷ்வர்: ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை | ஏப்ரல் 08, 2021

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரருக்கான விருதுக்கு புவனேஷ்வர் குமார், ரஷித் கான், சீன் வில்லியம்ஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த மார்ச் மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கானிஸ்தான் ‘சுழல்’ வீரர் ரஷித் கான், ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 6 விக்கெட் சாய்த்த புவனேஷ்வர், 5 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் 11 விக்கெட் வீழ்த்திய ரஷித் கான், 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் 6 விக்கெட் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அசத்திய சீன் வில்லியம்ஸ் 264 ரன், 2 விக்கெட் சாய்த்தார்.

ராஜேஷ்வரி பரிந்துரை: சிறந்த வீராங்கனை விருதுக்கான ‘டாப்–3’ பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ராஜேஷ்வரி, பூணம் ராத், தென் ஆப்ரிக்காவின் லிசெல் லீ இடம் பிடித்துள்ளனர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 8 விக்கெட் கைப்பற்றிய ராஜேஷ்வரி, 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் 4 விக்கெட் சாய்த்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் அசத்திய பூணம் ராத், ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 263 ரன் குவித்தார். இந்தியாவுக்கு எதிராக ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 288 ரன் குவித்த லிசெல் லீ, ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார்.

மூலக்கதை