ரூ.8.6 கோடி ஊழல் புகார் எதிரொலி: ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை...டசால்ட் நிறுவனம் விளக்கம்.!!!!

தினகரன்  தினகரன்
ரூ.8.6 கோடி ஊழல் புகார் எதிரொலி: ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை...டசால்ட் நிறுவனம் விளக்கம்.!!!!

பிரான்ஸ்: ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை என பிரான்சின் டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில் புதிய அதிநவீன போர் விமானமான பிரான்சின் ரபேல் போர் விமானம் வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 விமானங்கள் வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.இதன் பின், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரானதும், அவர் கடந்த 2016ல் பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணம் செய்தார். அப்போது, ரபேல் விமானம் வாங்குவதில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி ஒரு விமானம் ரூ.1670 கோடி என்ற விலையில் 36 விமானங்கள் வாங்க ரூ.59,000 கோடிக்கு பிரதமர் மோடி ஒப்பந்தத்தை முடிவு செய்தார். இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. விமானத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பெருமளவில் எதிரொலித்தது.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு முடிவுகள் மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்தன. இதற்கிடையே, ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது. ரபேல் ஒப்பந்தம் கடந்த 2016ல் உறுதியானதும் 2018 அக்டோபரில் டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை ஒப்பந்த நிறுவனமான டெப்சிஸ் சொலிசஷன் என்ற நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கமிஷனாக கொடுத்துள்ளது.இந்த விவகாரத்தை பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்திருப்பதாக அந்நாட்டின் ஆன்லைன் பத்திரிகைய மீடியா பார்டு தெரிவித்துள்ளது. பிரான்சின் பெரிய நிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை அந்நாட்டின் ஊழல் தடுப்பு துறை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, கடந்த 2017 மற்றும் 2018ல் டசால்ட் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளில் பல்வேறு குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தை ஆய்வு செய்த போதுதான், ரபேல் ஒப்பந்தம் முடிவானதும் டசால்ட் நிறுவனம் இந்திய இடைத்தரகு நிறுவனமாக செயல்பட்ட டெப்சிஸ் நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டசால்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை. 36  ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை 2016-ல் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை