நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!

புதுடெல்லி: நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக, அவர்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் வரும் 11ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாடு முழுவதும் முதல் கட்ட தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இந்த முகாமில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

2ம் கட்ட தடுப்பூசி முகாமின் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவரிடம் சான்று பெற்று வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஏப். 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அனைவருக்கும் சிறப்பு முகாம்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 7 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் 3 நாட்களுக்கு வேண்டிய தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதை மறுத்துள்ளது.

தடுப்பூசி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வரும்நிலையில், வரும் 11ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பொது மற்றும் தனியார் தொழில் நிறுவன பணியிடங்களில் தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு  எழுதிய கடிதத்தில், ‘அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் பணியாற்றி வரும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அனைவரும் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர்.

அதனால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமும் பணியிடத்தில் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த தயாராக இருக்கும்படியும், அதற்கான ஆலோசனைகளை வழங்கும்படியும் கோரப்பட்டுள்ளது.

பணியிடத்தில் தடுப்பூசி போடுவதால், கொரோனா வைரஸ் பரவல் அபாயத்தை கட்டுப்படுத்த முடியும்.

சுமார் 100 பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில், தடுப்பூசி முகாம்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிக்கு அனைத்து மாநிலங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இதற்கான சிறப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட பணிக்குழு செயல்படும்.

மாநகராட்சி ஆணையர் தலைமையில் நகர்ப்புற பணிக்குழு செயல்படும். இவர்கள் பணியாளர்கள் பணியிடங்களை தேர்வு செய்வார்கள்.

இதற்கான சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

தகுதியான மற்றும் விருப்பமுள்ள பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

அதேநேரம், பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட வெளியாட்கள் பொது மற்றும் தனியார் பணியிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்னர், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

‘ஆன்-தி-ஸ்பாட்‘ முறையிலும் பதிவு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

மூலக்கதை