திமுக பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா: காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கும் தொற்று

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா: காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கும் தொற்று

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும், வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

மேலும் தேர்தல் பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது.



இதைத் தொடர்ந்து நேற்று அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். மேலும் கொரோனா பரிசோதனையும் எடுத்து கொண்டார்.

இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பொது செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங். வேட்பாளர் செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெரும்புதூர் தொகுதி வேட்பாளராக செல்வப்பெருந்தகை அறிவிக்கப்பட்டார்.

தொகுதி முழுவதும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இன்று காலை அதற்கான முடிவு வந்தது.

அதில் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதையடுத்து, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவரை சந்திக்க நேரில் யாரும் வர வேண்டாம் என்றும் கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர் வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிட்டார்.

இவருக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றார்.

அங்கு அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இன்று காலை பரிசோதனை முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்த டாக்டர்கள் 10 நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து இன்று காலை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேட்பாளர் ஜெயக்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.

மூலக்கதை