இது உங்கள் இடம் : இதிலும் இரண்டில் ஒன்று தான்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : இதிலும் இரண்டில் ஒன்று தான்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடுநிலைவாதிகள், '50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகம் சீர்குலைந்து விட்டது. இந்த இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான ஒரு ஆட்சி அமைய வேண்டும்' என, நினைத்தனர். நடிகர் ரஜினி மூலம், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம் கிடைத்தது என்றாலும், அதே திரை துறையிலிருந்து, அரசியலுக்கு வந்த கமல், ஆச்சரியம் அளித்தார்.


ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல், அ.தி.மு.க., ---- தி.மு.க., சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இது. அதனால், இந்த தேர்தலில் பரபரப்புக் காணப்பட்டது. ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, ஆட்சியையும், கட்சியையும் திறம்பட நிர்வகித்தார்,முதல்வர் இ.பி.எஸ்., அவ்வகையில் அவருக்கு, 'சபாஷ்' போடலாம். இ.பி.எஸ்., ஆட்சியில் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வை பார்க்கையில், இவர்களது குறைகள் பெரிதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க.,வில் அராஜகம், ரவுடியிசம், அநாகரிக பேச்சு போன்றவை இருக்காது. இவை அனைத்தும், தி.மு.க., ஆட்சியில் கொடி கட்டி பறக்கும். கருணாநிதி இருக்கும் வரை, தி.மு.க., தன் கட்சி நிர்வாகிகளை நம்பியது.

ஸ்டாலின், அவர்களை நம்பாமல், வட மாநிலத்தைச் சேர்ந்த, 'ஐபேக்' நிறுவனத்தை, அரசியல் ஆலோசனைக்காக, 300 கோடி ரூபாய் கொடுத்து, பணியமர்த்தினார். 'ஐபேக்' இயக்கிய நாடகத்தில், ஸ்டாலினின் கதாபாத்திரம், காமெடியனாகத் தான் இருந்தது. மேலும், அரசியல் அரிச்சுவடிக் கூட தெரியாத, தன் மகன் உதயநிதியை, வேட்பாளராக களமிறக்கியது, பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஆனால், கூட்டணிக்கட்சிகளின் பலத்தால், தி.மு.க.,வும் தேர்தல் களத்தில் வலுவாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. துண்டு, துக்கடா கட்சிகள் இந்த தேர்தலில் கணிசமான ஓட்டுகள் வாங்குவதை விட, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஓட்டைப் பிரிக்கும்என்பது தான் உண்மை.


ஒருவேளை, ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வந்திருக்கும். அல்லது அவர், 'வாய்ஸ்' கொடுத்திருக்கலாம்; எதுவுமே அவர் செய்யவில்லை. ஆக, இந்த தேர்தல் எப்போதும் போல, இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி தான். இரண்டில் ஒன்று, ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வராது.

மூலக்கதை