அமைகிறது! மதுரையில் மீண்டும் கொரோனா கேர் சென்டர் ...... 800 படுக்கைகளுடன் தயாராகும் முதல் மையம்

தினமலர்  தினமலர்
அமைகிறது! மதுரையில் மீண்டும் கொரோனா கேர் சென்டர் ...... 800 படுக்கைகளுடன் தயாராகும் முதல் மையம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மீண்டும் 'கேர் சென்டர்'கள் துவங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 800 படுக்கைகளுடன் பிரமாண்ட 'கேர் சென்டர்' ஒன்று அமைகிறது.மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரி பாதிப்பு 100ஐ கடந்து விட்டது. சிகிச்சை பெறுவோர் விகிதம் கணிசமாக உயர்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கும் பணி நடக்கிறது. தற்போது 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த முறை தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில், லேசான கவனிப்பு தேவைப்படுவோர் தோப்பூர் மருத்துவமனையில், அறிகுறியின்றி பாதிக்கப்பட்டோர் கொரோன கேர் சென்டர் மற்றும் வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கொரோனா 'கேர் சென்டர்'களை துவங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக பல்கலை அருகே வடபழஞ்சி எல்காட் நிறுவன கட்டடம் கொரோனா கேர் சென்டராக மாற்றப்படுகிறது. இங்கு ஒரே இடத்தில் 800 படுக்கைகள் தயாராகி வருகின்றன. இதனுடன் அத்தியாவசிய மருந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு வசதியும் ஏற்படுத்தப் படுகிறது.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'லேசான, அறிகுறியில்லாத நோயாளிகளை கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்க உள்ளோம். ஒரே இடத்தில் பலரை அனுமதித்தால் கவனிப்பது எளிது. இதற்காக எல்காட் கட்டடத்தில் பிரமாண்ட சென்டர் அமைக்கப்படும். தேவைப்பட்டால் கல்லுாரி கட்டடங்களும் பயன்படுத்தப்படும்' என்றார்.

மூலக்கதை