வங்கி சுயவிவரங்களை பெற்று பெண்ணை ஏமாற்றி ₹4 லட்சம் சுருட்டல்: பீகார் வாலிபர் சிக்கினார்

தினகரன்  தினகரன்
வங்கி சுயவிவரங்களை பெற்று பெண்ணை ஏமாற்றி ₹4 லட்சம் சுருட்டல்: பீகார் வாலிபர் சிக்கினார்

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த இளம்  பெண் ஒருவருக்கு கடந்த மார்ச் 3ம் தேதியன்று அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், அப்பெண்ணின் வங்கி கணக்கின் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை நம்பி அப்பெண், அந்த குறுஞ்செய்தியில் இருந்த செல்போன் எண்ணுக்கு அழைத்தார். எதிர்முனையில் வந்த நபர், அப்பெண்ணுக்கு உதவுவதாக கூறி தகவல்களை பெற்றார். சிறிது நேரத்திற்கு பின்னர், அப் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வந்த தகவலில் அவரது வங்கிக்கணக்கின் கடவுசொல் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வங்கிக்கிளைக்கு சென்று விசாரித்தபோது, அவரும், அவரது தந்தையும் வைத்திருந்த இணை வங்கிக்கணக்கு மற்றும் தனிப்பட்ட வங்கி கணக்கு ஆகிய இரண்டிலிருந்தும் 4 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதும், அதிலிருந்து ₹4 லட்சம் சுருட்டப்பட்டதும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் பெண்ணின் வங்கிகணக்கிலிருந்து பணத்தை சுருட்டிய நபரை பீகாரில் கைது செய்தனர். விசாரணையில் இந்த மோசடியில் பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த இரண்டு பேர் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர் பீகாரின் பாகல்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர், ராமு என்பவரிடமிருந்து இந்த வித்தையை கற்றுக்கொண்டு பணமோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தலைமறைவாக உள்ள ராமுவை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை