கிழக்கு டெல்லி மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு பதிவு

தினகரன்  தினகரன்
கிழக்கு டெல்லி மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு பதிவு

புதுடெல்லி: கிழக்கு டெல்லி மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு டெல்லி மாநகராட்சி மேயர் நிர்மல் ஜெயின் நேற்று மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் புதிய வசதியை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் பிறப்பு அல்லது இறப்பு தொடர்பாக முதலில் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய இலவசம்என்று மேயர் நிர்மல் ஜெயின் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:டெல்லி மக்களின் வசதிக்காக பிறப்பு, இறப்பு பதிவு தற்போது ஆன்லைன் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சேவைகளும் எளிதாக மாற்றப்பட்டுள்ளது. எந்தவித கட்டணமும் இல்லாமல் பொதுமக்கள் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளை மேற்கொள்ள முடியும். இனி இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ள பொதுமக்கள் சிஎஸ்பி மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை முதன்முதலாக பதிவிறக்கம் செய்தால் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. இதற்காக mcdonline.nic.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் மனுக்களை நிரப்பி, அப்படியே பதிவேற்றம் செய்யலாம். தேவைப்படும் ஆவணங்களையும் அதில் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இதுதொடர்பான தகவல் விண்ணப்பித்த நபரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கிழக்கு டெல்லி மாநகராட்சி மருந்துவ நிவாரணம் மற்றும் பொதுசுகாதார குழு தலைவர் காஞ்சன் மகேஸ்வரி கூறுகையில்,’ இந்த திட்டத்தின்படி பிறந்த குழந்தையின் சான்றிதழ் பெற முதலில் கட்டணம் இலவசம். அதன் பின் பெறும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்’ என்றார்.

மூலக்கதை